தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களின் கோரிக்கைகளை அதிகபட்சம் ஒரு மாதத்துக்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக நலவாரியத் தலைவர் பொன்.குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பெரம்பலூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 25 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருப்பது, அனைத்து தொழிலாளர்களின் வாழ்வை மேம்படுத்த உதவும்.
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களின் கோரிக்கைகளை அதிகபட்சம் ஒருமாத காலத்துக்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர் நலத் துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான நவீன கட்டமைப்பை உருவாக்கும் வகையில், அனைத்து தொழிலாளர் நல அலுவலர்கள், உதவி ஆணையர்களுக்கும் மடிக்கணினி மற்றும் அலுவலகத்தில் கணினி வசதி செய்து தரப்பட உள்ளது. மேலும், 111 கணினி இயக்குபவர்கள் மற்றும் 66 இளநிலை உதவியாளர்கள் பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தமிழக முதல்வர் விரைவில் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார்.
நல வாரியத்தில் பதிவு செய்யாத தொழிலாளர்கள் பணியின்போது உயிரிழக்க நேரிட்டாலும், அவர்களின் குடும்பத்தினருக்கும் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. அனைத்து தொழிலாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்கும் பணி நடைபெறுகிறது. வாரியம் மூலம் நலத்திட்ட உதவிகள் பெற்றுத் தருவதாக கூறி பணம் வசூலிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago