தஞ்சாவூர் அருகே மருங்குளத்தில் செயல்பாடின்றி பூட்டிக்கிடந்த தனியாருக்கு சொந்தமான அரிசி அரைவை ஆலையில் உரிய ஆவணங்களின்றி பதுக்கிவைக்கப்பட்டிருந்த 25 ஆயிரம் நெல் மூட்டைகளை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு சொந்தமான 330 சாக்குகளும் கைப்பற்றப்பட்டன.
தஞ்சாவூர் அருகே வல்லம்- ஒரத்தநாடு சாலையில், மருங்குளத்தில் உள்ள தனியார் அரிசி அரைவை ஆலை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் உள்ளது. இந்த ஆலையில் உள்ள கிடங்குகளில் அதிகளவிலான நெல் மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் குடிமைப்பொருள் குற்ற புலனாய்வுத் துறை போலீஸார், அந்த அரிசி அரைவை ஆலையில் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, ஆலையில் இருந்த ரூ.2 கோடி மதிப்பிலான 25 ஆயிரம் நெல் மூட்டைகள், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பயன்படுத்தப்படும் முத்திரை பதிக்கப்பட்ட 330 சாக்குகள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றை லாரிகளில் ஏற்றி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதுகுறித்து உமா மகேஸ்வரி கூறியது: இந்த ஆலையில் இருந்த நெல் மூட்டைகளுக்கு எவ்வித ஆவணங்களும் இல்லாததால், அவற்றை பறிமுதல் செய்துள்ளோம். ஒரு கிடங்கில் 4 ஆயிரம் மூட்டைகளிலும், மற்ற கிடங்குகளில் குவியல் குவியலாகவும் நெல்மணிகள் இருந்தன. இவற்றை மூட்டைகளில் நிரப்பி நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்கு அனுப்பும் பணி நடைபெறுகிறது.
அதேபோல, கொள்முதல் நிலையத்தில் பயன்படுத்தப்படும் 330 சாக்குகளும் இங்கு கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றில் லாட் எண்கள் இல்லாததால், அவை எந்த கொள்முதல் நிலையத்திலிருந்து வந்தன என்பது தெரியவில்லை.
இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படும். மேலும், இந்த அரைவை மில்லின் உரிமையாளர் யார், தற்போது ஆலை யாரின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும்.
இங்கு பறிமுதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையங்களில் விற்பதற்காக வியாபாரிகள் பதுக்கிவைத்திருந்தனரா என்பது குறித்தும் விசாரிக்கப்படும். விவசாயிகளின் நலனுக்காக கொண்டுவரப்பட்ட கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகள் நெல்லை கொண்டு வந்து கள்ளத்தனமாக விற்பனை செய்வது தெரியவந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இங்கு நெல் மூட்டைகளை பதுக்கி வைத்தது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீஸாரும் விசாரணை நடத்தி, இச்செயலில் தொடர்புடையவர்களை கண்டுபிடிப்பார்கள் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago