தமிழக அரசின் சென்னை ஆவண காப்பகத்தின் கிளையை புதுக்கோட்டையில் ஏற்படுத்த வேண்டும் என புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகம் வலியுறுத்தி உள்ளது.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இந்திய அரசுடன் புதுக்கோட்டை சமஸ்தானம் இணைந்தது. இங்கு, மன்னராட்சி நிர்வாகத்தில் பயன்படுத்தப்பட்ட ஏராளமான ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மேலும், ஏராளமான கல்வெட்டு படியெடுக்கப்பட்ட குறிப்புகளும் உள்ளன.
இதுபோன்ற, வரலாற்று சிறப்பு மிக்க ஏராளமான ஆவணங்கள் இங்கு உள்ளதால் சென்னை ஆவண காப்பகத்தின் கிளையை புதுக்கோட்டையில் தொடங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனர் ஆ.மணிகண்டன், தலைவர் கரு.ராஜேந்திரன் ஆகியோர் கூறியது: பழமை வாய்ந்த கல்வெட்டு குறிப்புகளின் கல்வெட்டுபடி நகல்கள், சுமார் 300 ஆண்டுகள் வரையிலான பழமையான கோப்புகள், நீதிமன்ற நடைமுறைகள், சட்டப்பேரவை குறிப்புகள், ஆங்கில அரசுக்கும், தொண்டைமான்கள் நிர்வாகத்துக்குமான ஒப்பந்தங்கள், கடிதத் தொடர்புகள், நிர்வாக செயல்பாடுகள் உள்ளிட்ட குறிப்புகள் புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தன.
மேலும், முதலாவதாக மாணவர்களுக்கு பள்ளிகளில் உணவு வழங்கியது, அனைவருக்கும் கல்வி வழங்க எடுத்த முடிவுகள், பஞ்சம் போக்க மக்களுக்கு அரசு வழங்கிய வேலைவாய்ப்புகள், நீர்நிலைகள் தோற்றுவிப்பு, இந்திய அரசுக்கே வழிகாட்டிய நிர்வாக நடைமுறைக் குறிப்புகள், தனித்துவ பத்திரிகை சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் உள்ளன.
இந்த ஆவணங்கள் பருத்தி நூலினால் உருவாக்கப்பட்ட பழமையான காகிதங்கள் என்பதால் கரையான் உள்ளிட்ட உயிரிய பாதிப்புகள் குறைவாகவே உள்ளன. இத்தகைய ஆவணங்கள் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வந்த வருவாய்த் துறையின் கோட்டாட்சியர் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் இத்தனை ஆண்டுகள் பாதுகாக்கப்பட்டு வந்த ஆவணங்களுக்கு பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளது.
எனவே, சென்னை ஆவண காப்பகத்தின் கிளையை புதுக்கோட்டையில் ஏற்படுத்தினால்தான் செழுமையான நிர்வாகத்தை வெளிப்படுத்தும் இத்தகைய தொல் ஆவணங்களை பாதுகாக்க முடியும். இது குறித்து தொல்லியல் துறை அமைச்சர் தங்கம். தென்னரசுவிடம் தெரிவித்துள்ளோம் என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago