சோழவரம் அருகே - வண்டலூர்- மீஞ்சூர் சாலையில் மோட்டார் சைக்கிள்களில் சாகசம் : 8 பேர் மீது வழக்குப் பதிவு

By செய்திப்பிரிவு

சோழவரம் அருகே வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்த சென்னை இளைஞர்கள் 8 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 8 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள அருமந்தை பகுதியில், வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் நேற்று முன்தினம் மாலை, இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபடுவதாக சோழவரம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சோழவரம் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையில், எஸ்.ஐ. ஆறுமுகம் மற்றும் போலீஸார் சம்பவ இடம் விரைந்து, சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு, சென்னையைச் சேர்ந்த 8 இளைஞர்கள், வெளிவட்டச் சாலையில், மீஞ்சூர் மார்க்கமாகச் செல்லும் சாலை பகுதியில், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள்களை அதிவேகமாக செலுத்தும் பந்தயம்மற்றும் சாகசத்தில் ஈடுபட்டதுதெரிய வந்தது. இதையடுத்து, அந்த இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்த சோழவரம் போலீஸார், சாகசத்தில் ஈடுபடுத்தப்பட்ட 8 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில், பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு, அச்சுறுத்தல் மற்றும் விபத்து ஏற்படுத்தக் கூடிய மோட்டார் சைக்கிள் பந்தயங்கள், சாகசங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட காவல் துறை எச்சரித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் இது போன்ற இளைஞர்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பிரத்யேக மொபைல் எண் 63799 04848-க்கு எவ்வித தயக்கமும் இன்றி தொலைபேசி, வாட்ஸ் ஆப் வாயிலாக தெரிவிக்கலாம் எனவும் மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்