கோவை மாவட்டத்தை காட்டிலும் - திருப்பூரில் நீட் தேர்வுக்கு அதிகம் பேர் விண்ணப்பிப்பு :

கோவை மாவட்டத்தை காட்டிலும், திருப்பூர் மாவட்டத்தில் நீட் தேர்வுக்குஅதிகம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

நடப்பு 2021-ம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ நுழைவுத் தேர்வான ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க, ஆகஸ்ட் 10-ம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் தேசிய தேர்வுகள் முகமை(என்டிஏ) சார்பில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கிடையே, கரோனா பரவலால் இந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், செப்டம்பர் 12-ம் தேதி கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதற்கான விண்ணப்பப் பதிவு, கடந்த ஜூலை 13-ம் தேதி மாலை முதல் https://ntaneet.nic.in/ என்ற இணையதளத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆகஸ்ட் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய விதிக்கப்பட்டிருந்த காலஅவகாசம் நேற்றுடன் (ஆக14) நிறைவடைந்தது. இந்நிலையில், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மூன்று மாவட்டங்களில் முறையே 318, 224, 125 பேர் என மொத்தம் 667 பேர் விண்ணப்பித்துள்ளனர். கோவை மாவட்டத்தை காட்டிலும், திருப்பூர் மாவட்டத்தில் ‘நீட்’தேர்வுக்கு அதிகம் பேர் விண்ணப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட கல்வி அதிகாரி கூறும்போது, "கரோனா தொற்று காலம்என்பதால், அனைத்து மாணவர்களுக்கும் இணைய வழியில்தான் பயிற்சி அளிக்கப்படுகிறது. கோவை,திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை ஒப்பிடும்போது, திருப்பூர்மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு அதிகம் பேர் விண்ணப்பித்துள்ளனர்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE