வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்திருப்பது வேளாண்மைக்கு புத்துணர்ச்சி அளித்துள்ளது, என நாமக்கல் மாவட்ட தரிசு நில விவசாயிகள் சங்க தலைவர் கே.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்திருப்பது வேளாண்மைக்கு ஒரு புத்துணர்ச்சி அளித்துள்ளது.
நடப்பாண்டில் 2,500 கிராமங்களில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் அனைத்து கிராமங்களும் ஒட்டுமொத்த வளர்ச்சியை அடைந்து தன்னிறைவு பெற்றவையாக மாற்றும் திட்டத்தின் கீழ் பண்ணைக்குட்டைகள், கசிவு நீர்க் குட்டைகள் போன்ற நீராதாரங்கள் பெருக்கப்படும் என்ற திட்டம் வரவேற்கக்கூடியது.
மானாவாரி நிலத்தில் மரக்கன்றுகள் நடுவதற்கு மானியம், நிகர சாகுபடி பரப்பை 60 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை, சிறு, குறு விவசாயிகளை ஒன்றிணைத்து கூட்டுப் பண்ணை விவசாய திட்டம், 2,500 இளைஞர்களுக்கு வேளாண் பயிற்சிகள், அனைத்து மாவட்டங்களிலும் காய்கறி, கீரை சாகுபடி பயிற்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது வரவேற்கத் தக்கது.
பனைமரங்கள் வெட்ட மாவட்ட ஆட்சியரிடம் முறையான அனுமதி, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ரூ.50 லட்சம் மதிப்பிலான மிளகு பதப்படுத்தும் தொழில் போன்ற திட்டங்கள் வரவேற்கக் கூடியதாக உள்ளது. எனினும், தரிசு நிலங்களை மேம்படுத்த புதிய திட்டங்கள் இல்லாதது சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago