புதுக்கோட்டையில் மாவட்ட குடும்ப நல நீதிமன்றம், கீரனூரில் சார்பு நீதிமன்றம் ஆகியவற்றின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பேசிய தாவது:
இந்திய அரசியல் சாசனம் நாட்டில் வாழும் அனைவருக்கும் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சமமான நீதியை வழங்க வேண்டும் என்று கூறுகிறது. அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கும்போது, சமூக நீதி சாத்தியப்படும். அனைத்து மக்களுக்குமான சம நீதியை உறுதிப்படுத்துவதற்கான பணிகளை நீதிமன்றங்கள் செய்ய வேண்டும்.
அரசியல் மற்றும் பொருளாதார நீதி, மக்களுக்கு வழங்கப்படும் கல்வியின் மூலம் கிடைக்கும். கரோனா காலத்தில் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசும் போது, ‘‘சென்னை உயர்நீதிமன்ற வளாகம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்ற வளாகம் ஆகியவை அமைந்துள்ள பாரம்பரிய கட்டிடங்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மேற்கொள்ளும்’’ என்றார்.
இந்நிகழ்ச்சிகளில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.கோவிந்தராஜ், ஆர்.சுரேஷ் குமார், என்.சதீஷ்குமார், எஸ்.கண்ணம்மாள், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.அப்துல்காதர், மாவட்ட எஸ்.பி நிஷா பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago