தமிழக சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை குறித்து கோவை தொழில் துறையினர் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க (சைமா) தலைவர் அஷ்வின் சந்திரன்: ஜவுளி பூங்காக்கள் ஏற்படுத்துவது, சிப்காட் வசதிகளை மேம்படுத்துவது போன்ற அறிவிப்புகள் ஜவுளித் துறையின் அனைத்து பிரிவுகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்தும். ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்பது, அப்பகுதிகளில் உள்ள துணி பதனிடும் ஆலைகளுக்கும், அதனை சார்ந்த பல்வேறு ஆலைகளுக்கும் பயனளிக்கும். தொழில்நுட்ப ஜவுளி வளர்ச்சிக்கு தேவையான கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்பதும் வரவேற்புக்குரியதாகும்.
கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்க (கொடிசியா) தலைவர் ரமேஷ்பாபு: தமிழகத்தில் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நிதி, கட்டமைப்பு, இதர சிக்கல்களை ஆய்வு செய்யவும், இந்நிறுவனங்கள் வளர்ச்சி பெற தேவைப்படும் நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும் ந.சுந்தரதேவன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரிகளை உயர்த்தாமல் பெட்ரோல் மீதான வரி குறைப்பு, கோவையில் 500 ஏக்கரில் ரூ.225 கோடி மதிப்பில் ராணுவ தளவாட பொருட்கள் உற்பத்தி பூங்கா அமைத்தல் உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.
தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்க (சீமா) தலைவர் கே.வீ.கார்த்திக்: கல்வி வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் இயக்கம் மூலம் வீட்டு குடிநீர் இணைப்புக்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிப்காட் தொழிற்பேட்டைகள் மேம்பாடு குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. தொழில் துறைக்கு சாதகமான அம்சங்களை தமிழக நிதிநிலை அறிக்கையில் காண முடிகிறது.
கோயமுத்தூர் வெட்கிரைண்டர் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆர்.சவுந்திரகுமார்: பெட்ரோல் விலை குறைப்புக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து செலவு குறையும். மூலப்பொருட்கள் விலை குறைய வாய்ப்புள்ளது. கிரைண்டர் உற்பத்தி தொழிலுக்கான சாதகமான அம்சங்கள் உள்ளன.
கோயமுத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் நலச்சங்க தலைவர் பி.நல்லதம்பி: சிறு, குறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள், 9 இடங்களில் சிப்காட் தொழிற்பூங்கா, ராணுவ தளவாட உற்பத்தி மையம், மின்வாகன உற்பத்தி பூங்கா, கோவையில் மெட்ரோ ரயில் சேவை போன்ற அறிவிப்புகளை வரவேற்கிறோம். கோவையில் அடுக்குமாடி தொழிற்பேட்டையை அறிவிக்காதது ஏமாற்றமாக உள்ளது.
கோயமுத்தூர் கம்ப்ரஸர் இன்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் தலைவர் எம்.ரவீந்திரன்: பெரிய தொழில்களுக்கு பல்வேறு அறிவிப்புகள் இருந்தாலும், சிறு,குறு தொழில்களுக்கு சாதகமான மற்றும் அவசியமான அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இல்லை. மின்சார கட்டண சலுகை, கடன் வட்டி தள்ளுபடி போன்ற அறிவிப்புகளை எதிர்பார்க்கிறோம்.
கோவை பம்ப்செட் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர் சங்க (கோப்மா) தலைவர் கே.மணிராஜ்: வரி முறைகளை சீரமைக்க வல்லுநர் குழு அமைக்கப்படும், கோவையில் மெட்ரோ ரயில் சேவை, கோவை பெருநகர வளர்ச்சி குழுமம், குறு நிறுவனங்கள் கடன் பெற மாநில அளவில் கடன் உத்தரவாத திட்டம், தொழிற்பேட்டைகளில் 4.0 எனும் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குதல் உள்ளிட்ட அறிவிப்புகளை வரவேற்கிறோம். டீசலுக்கும் வரி குறைக்க வேண்டும்.
கோவை மக்களவை தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்: தமிழ்நாட்டின் நிதிநிலை சிரமங்களை உள்வாங்கிக்கொண்டு குறுகிய கால பயன்கள், நீண்ட கால பயன்கள் என்கிற வகையில் நல்லதொரு நிதிநிலை அறிக்கையை தமிழக நிதி அமைச்சர் முன்மொழிந்துள்ளார். குறிப்பாக, கோவையில் ராணுவ பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி பூங்கா தொடங்குவதன் மூலம் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பல்லாயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவர். மகளிர் சுய உதவிக்குழுவுக்கான கடன் தள்ளுபடி, பெட்ரோல் மீதான வரியில் ரூ.3 குறைப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் சாதாரண ஏழை உழைப்பாளிகள் நேரிடையாக பயன்பெறும் திட்டங்களாகும்.
விசைத்தறியாளர்கள் வரவேற்பு
தமிழக விசைத்தறி சங்க கூட்டமைப்பின் கோவை மண்டல பொறுப்பாளர் எம்.பாலசுப்ரமணியம்: நிதிநிலை அறிக்கையில் விசைத்தறியாளர்களுக்கு பள்ளி சீருடை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு மற்றும் கூலி உயர்வு இல்லாமை ஆகியவற்றுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு மிகவும் வரவேற்புக்குரியது. துணி நூல் துறையை மேம்படுத்த தனி வாரியம் அறிவித்துள்ளதும் நல்ல விஷயம்.கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் சி.பழனிசாமி: துணி நூல் துறையை மேம்படுத்த தனி வாரியம் அமைத்தல், பள்ளி சீருடை ஒதுக்கீடு ஆகியவை வரவேற்புக்குரிய விஷயங்களே. ஆனால் விசைத்தறிக்கென பிரத்யேக அறிவிப்புகள் எதுவும் வரவில்லை. எங்களது கோரிக்கையான விசைத்தறிக்கென தனி வாரியம், கூலி உயர்வு குறித்த அறிவிப்புகள் வராதது ஏமாற்றமளிக்கிறது
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago