இரண்டாவது முயற்சியாக வனப்பகுதியில் விடப்பட்ட ரிவால்டோ யானை வனப்பகுதியிலேயே ஆரோக்கியமாக இருப்பதாக தமிழக வனத்துறை, சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
தும்பிக்கை சுருங்கி சுவாசப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு நீலகிரி மாவட்டம் மசினக்குடி பகுதியில் சுற்றித்திரிந்த ரிவால்டோ யானையை, வாழைத்தோட்டம் பகுதியில் வைத்து வனத்துறையினர் சிகிச்சையளித்தனர். பின்னர் அந்த யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு போய் விடப்பட்டது. ஆனால் அந்த யானை மீண்டும் ஊருக்குள் வாழைத்தோட்டம் என்ற பகுதிக்கு திரும்பி வந்து விட்டது.இந்நிலையில் அந்த யானையை மீண்டும் வனப்பகுதியில் விட்டால் யானையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும், எனவே திருச்சிஎம்.ஆர்.பாளையம் யானைகள் முகாமில் வைத்து பராமரிக்க உத்தரவிடக்கோரியும் விலங்குகள் நல ஆர்வலரான முரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று முன்தினம் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ரிவால்டோ யானைக்கான மறுவாழ்வு திட்டம் என்ன என்பது குறித்து அரசு தரப்பில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் இதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக வனத்துறை தரப்பில் வழக்கறிஞர் முத்துக்குமார் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார். அதில், ரிவால்டோ யானையை வனப்பகுதிக்கு அனுப்பும் முதல் முயற்சி தோல்வியடைந்தது. இருப்பினும் இரண்டாவது முயற்சியாக அந்த யானை வனப்பகுதிக்குள் விடப்பட்டுள்ளது.இதுவரை அந்த யானை வனப் பகுதியிலேயே ஆரோக்கியமாக உள்ளது. அதன் நடமாட்டத்தை 30 வனத்துறை அதிகாரிகள் கண் காணித்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ரிவால்டோ யானையால் தொடர்ந்து வனப்பகுதியில் வசிக்க முடிகிறதா என்பதை வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும், எனக்கூறி வழக்கை 3 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago