கொற்கை, அழகன்குளத்தில் ஆழ்கடல் ஆய்வுகள் - மீண்டும் கலைஞர் செம்மொழி தமிழ் விருது : தமிழக அரசு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

கடந்த 2010 முதல் வழங்கப்படாமல் இருக்கும் கலைஞர் கருணாநிதி செம்மொழி தமிழ் விருது, இனிஆண்டுதோறும் ஜூன் 3-ம் தேதிவழங்கப்படும், கொற்கை, அழகன்குளம் பகுதிகளில் ஆழ்கடல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:

சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்குப் புத்துயிர் அளிக்கப்படும். 2010 முதல் வழங்கப்படாமலிருக்கும் ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது' இனி ஆண்டுதோறும் ஜூன் மாதம் 3-ம் தேதி ரூ.10 லட்சத்துடன் வழங்கப்படும்.

தலைமைச் செயலகம் முதல் தமிழகத்தின் அனைத்துத் துறைஅலுவலகங்கள் வரையிலும், தமிழை ஆட்சி மொழியாகப் பயன்படுத்துவது வலுப்படுத்தப்படும். உலக அளவில் போற்றப்படும் தமிழ் படைப்புகள் வெவ்வேறுமொழிகளில் மொழிபெயர்க்கப்படும். தமிழகத்தின் உயர்கல்வி மாணவர்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு தொழில்நுட்பப் புத்தகங்கள் தமிழில் வெளியிடப்படும்.

இந்த நிதியாண்டில் தமிழகத்தில் தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறைப்படி மேற்கொள்ள, நாட்டில் வேறு எந்த மாநிலத்தை விடவும் அதிக அளவாக ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும். கீழடி, சிவகளை, கொடுமணல் ஆகிய பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட இடங்கள் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும்.

தேசிய கடல்சார் நிறுவனம், தேசிய கடல் தொழில்நுட்பவியல் நிறுவனம், இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் ஆகிய நிறுவனங்களோடு இணைந்து, முதல்கட்டமாக சங்ககால துறைமுகங்கள் அமைந்திருந்த கொற்கை, அழகன்குளம் பகுதிகளில் ஆழ்கடல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்