குடிசை மாற்று வாரியத்துக்கு ரூ.3,954 கோடி :

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியத்துக்கு இந்த பட்ஜெட்டில் ரூ.3,954.44 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மதுரை, கோவை, திருப்பூரில், ஓசூரில் புதியதாக பெருநகர வளர்ச்சி குழுமங்கள் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக பட்ஜெட் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு 1961-ம் ஆண்டு வீட்டுவசதி வாரியச் சட்டம், தமிழ்நாடு 1971-ம் ஆண்டு குடிசைப்பகுதி (மேம்பாடு மற்றும் அகற்றுதல்) சட்டம், தமிழ்நாடு 1971-ம் ஆண்டு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டம் மற்றும் தமிழ்நாடு 1994-ம் ஆண்டு தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சட்டம் உள்ளிட்ட வீட்டுவசதித் துறையின் பழைய சட்டங்கள் மறுஆய்வு செய்யப்படும்.

பெருந்திட்டங்களின் கீழுள்ள நிலப்பரப்பு 22 சதவீதமாக உயர்த்தப்படுவதை இந்த அரசு உறுதி செய்யும். புதிய பெருநகர வளர்ச்சிக்குழுமங்கள் மதுரை, கோயம்புத்தூர் - திருப்பூர் பகுதி, வேகமாகவளர்ந்து வரும் ஓசூர் பகுதிகளுக்கு ஏற்படுத்தப்படும். 10ஆண்டு காலத்துக்குள், தமிழ்நாடு முற்றிலுமாகக் குடிசைகளற்ற மாநிலமாக விளங்க வேண்டுமென்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துக்காக ரூ.3,954.44 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகள் உட்பட ஆட்சேபணையுள்ள புறம்போக்கு நிலங்களிலிருந்து, குடிசையில் வாழும் மக்களை மனிதாபிமானத்துடன் நியாயமான முறையில் மறுகுடியமர்த்துவதற்காக, அனைத்து பொறுப்பாளர்களுடன் கலந்தாலோசித்து ஒரு புதிய குடிசைமறுகுடியமர்வு மற்றும் புனர்வாழ்வுக் கொள்கை வகுக்கப்படும்.

உலக வங்கி நிதியுதவி

தமிழ்நாடு வீட்டுவசதித் துறையை வலுவூட்டும் திட்டம் உலக வங்கியின் நிதியுதவியுடன் விரைவில் மேற்கொள்ளப்படும். ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன், நகர்ப்புற ஏழை மக்களுக்கு பேரிடர்களை எதிர்கொள்ளும் நிலைத்திருக்கக் கூடிய அனைவருக்குமான வீட்டுவசதித் திட்டத்தின் பேச்சுவார்த்தைகள் அண்மையில் நிறைவடைந்துள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்