சேதமடைந்து வரும் கூடலூர் தொட்டிப்பாலம் : பாசனத்துக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல்

By என்.கணேஷ்ராஜ்

18-ம் கால்வாய் திட்டத்துக்காக முல்லை பெரியாறு தலைமதகுப் பகுதியில் அமைக்கப்பட்ட தொட்டிப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டு, தூண்கள் பலமிழந்து வருகின்றன. இந்நிலை பாசனத்துக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் மற்றும் போடி வட்டத்தில் உள்ள மானாவாரி நிலங்கள் பயன்பெறும் வகையில் 2008-ம் ஆண்டு 18-ம்கால்வாய்த் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன்படி முல்லைப் பெரியாற்றின் லோயர்கேம்ப் தலை மதகிலிருந்து தனியே கால்வாய் அமைத்து கூவலிங்க ஆறு வரை 55 கி.மீ. தூரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதன் மூலம் நேரடியாக 6 ஆயிரத்து 839 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுவதுடன் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களுக்குப் பயன்படும் வகையில் நிலத்தடி நீர்மட்டமும் உயர்கின்றன. பள்ளமான பகுதிகளில் நீர் கடந்து செல்லும் வகையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தொட்டிப்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

இதில் கூடலூர் தம்மனம்பட்டி அருகே 24 தூண்களுடன் 120 அடி நீளம், 60 அடி உயரத்தில் முதல் தொட்டிப்பாலம் அமைந்துள்ளது. இதன் இரண்டு பக்கமும் சிறிய உடைப்பு ஏற்பட்டு நீர் வீணாகிறது. பல மாதங்களாக இந்நிலை தொடர் வதால் உடைப்பு அதிகரித்து வருகிறது. இதில் இருந்து பீய்ச்சியடிக்கும் நீர் தூண்களுக்கு கீழே வழிந் தோடி மண் அரிப்பை ஏற்படுத்துவதால் தூண் கள் பலமிழந்து வருகின்றன. இக்கால்வாயில் தண் ணீர் திறக்கும் முன்பு இவற்றைச் சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து 18-ம் கால்வாய் விவசாயிகள் சங்கத் தலைவர் ராமராஜ் கூறுகையில், இங்கு மட்டுமல்ல தேவாரம்-சாக்கலூத்து பெரும்பு வெட்டிகுளம், மச்சக்கல் ஓடை, ஏகலூத்து ஓடை, புதுப்பட்டி உள்ளிட்ட பல இடங்களிலும் உள்ள தொட்டிப்பாலங்களில் சிறு உடைப்புகள் ஏற்பட்டுள்ளன. இவற்றைச் சரி செய்த பிறகே பாசனத்துக்கு நீர் திறக்க வேண்டும் என்றார்.

பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுகையில், சீரமைப்பதற்கான மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் மராமத்து செய்யப்படும், என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்