வீட்டுக்கு ரூ.3,890 மின் கட்டணத்தால் அதிர்ச்சி - திருவோடு ஏந்தி மின்கட்டணம் செலுத்த சென்ற இளைஞர் :

By செய்திப்பிரிவு

மதுரையில் குளிர்சாதன வசதி இல்லாத தனது வீட்டுக்கு ரூ.3,890 மின் கட்டணம் வந்ததால் அதிர்ச்சி அடைந்த ஒருவர், கையில் திருவோடு ஏந்தியும், காதில் பூ வைத்தும் மின்கட்டணம் செலுத்தச் சென்றார்.

செல்லூரைச் சேர்ந்தவர் எம்பி.சங்கரபாண்டியன். இவரது வீட்டுக்கு நடப்பு மாதம் ரூ.3,890 மின்கட்டணம் வந்துள்ளது. வீட்டில் குளிர்சாதன வசதி இல்லை. வழக்கமாக இவரது வீட்டுக்கு ரூ.500 மட்டும்தான் மின் கட்டணம் வரும். இந்நிலையில், 8 மடங்கு அதிகமாக கட்டணம் வந்துள்ளதால் கடும் அதிர்ச்சி அடைந்த அவர், மின்வாரிய அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அவர்களோ நேரில் வரும்படி கூறினர்.

அதனால், நேற்று சங்கரபாண்டியன், கையில் திருவோடு ஏந்தியும், காதில் பூவைச் சுற்றியபடி கோரிக்கை பதாகையை ஏந்திக் கொண்டு செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் குறித்து கேட்கச் சென்றார்.

அதிகாரிகளிடம் அவர், அதிக மின்கட்டணம் வந்த காரணத்தை கேட்டார். அவர்களோ, ‘‘கரோனா பரவியதால் நேரில் மின் பயன்பாட்டை அளவிட முடியவில்லை, அதனால் மொத்தமாக அளவீடு செய்தோம். தங்களுக்கு மாற்று கருத்து இருந்திருந்தால், முன்கூட்டியே வந்து புகார் செய்திருக்கலாம், ’’என்றனர்.

அதனால், வேறு வழியின்றி சங்கர பாண்டியன், மின்கட்டணத்தைச் செலுத் திவிட்டு அதிக மின்கட்டணத்தால் திருவோடு ஏந்தும் நிலைக்கு தான் வந்து விட்டதாக அதிகாரிகளிடம் ஆதங்கத்தை தெரிவித்துவிட்டு திரும்பினார்.

சங்கரபாண்டியன் கூறியதாவது:

கடந்த 4 மாத கணக்கெடுப்பு காரணமாக, எனது வீட்டுக்கு ரூ.3,890 செலுத்தும்படி வந்துள்ளது. கடந்த கரோனா காலத்தைவிட அதிக கட்டணம் வந்துள்ளது. செல்லூரில் என்னைப்போல் பலருக்கும் இதேபோல வந்துள்ளது. மின்வாரியம் மாதந்தோறும் கணக்கெடுப்பு நடத்தி மின்கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்த வேண்டும். மின்வாரியம் பகிரங்க மின்கட்டணக் கொள்ளையில் இறங்கியுள்ளது. பொதுமக்களை ஏமாற்ற புரியாத காரணங்களைக் கூறி வருகின்றனர் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்