மதுரை ஆதீனமாக இருந்த அருணகிரி நாதர் முக்தியடைந்ததைத் தொடர்ந்து மதுரை ஆதீன மடத்தின் புதிய மடாதிபதியாக சுந்தரமூர்த்தி தம்பிரான் என்பவர் நியமிக்கப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.
மதுரையில் சைவ சமயத்தை வளர்க்கவும், மக்களிடம் சைவக் கருத்துக்களை பரப்பவும் திருஞான சம்பந்தரால் இந்த ஆதீனம் உருவாக்கப்பட்டது. இவருக்குப் பிறகு ஒவ்வொரு குரு சீடர்கள் மூலம் இந்த ஆதீனம் வளர்ச்சியை கண்டது.
292-வது குரு மகா சன்னிதானமாக இருந்த அருணகிரிநாதர், தனக்குப் பிறகு இளைய சன்னிதானமாக திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்யானந்தாவை நியமித்தார். இதில் சில சர்ச்சைகள் ஏற்பட்டதால், அவரை நீக்கினார். இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது.
இதற்கிடையில் பிள்ளையார்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரை இளைய மடாதிபதியாக நியமித்த நிலையில், அவரும் நீக்கப்பட்டு, தற்போது சுந்தரமூர்த்தி தம்பிரான் என்பவரை கடந்த 2019-ல் இளைய மடாதிபதியாக நியமித்து, பட்டமும் சூட்டியதாகவும், இவர் திருவாவடுதுறை ஆதீனத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர் எனவும் மதுரை ஆதீனம் நிர்வாக தரப்பில் கூறப்படுகிறது.
மீண்டும் நித்யானந்தாவால் சர்ச்சையா?
இதற்கிடையில், நித்யானந்தா தற்போது தனியாக கைலாசா தீவு என்று நாட்டை உருவாக்கி அதற்கு தலைமை வகித்து வருவதாக இணையதளத்தில் தெரிவித்து படங்களையும் வெளியிட்டு வந்தார். மதுரை ஆதீனம் கவலைக்கிடமான நிலையை அறிந்த நித்யானந்தா தனது முகநூலில் அடுத்த இளைய ஆதீனமாக பதவி ஏற்பேன் என்று கூறியதாக தகவல் வெளியாகி இருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், மீனாட்சி அம்மன் கோயில் அருகே நித்யானந்தாவின் மடம் ஒன்று செயல்படுகிறது. அங்கிருந்தவர்கள் திடீரென ஆதீன மடத்தில் நுழைந்துவிடக் கூடாது என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
சொத்துகள்
மதுரை ஆதீன மடத்துக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன. இந்த மடத்தை சார்ந்து 50-க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் உள்ளன. தற்போது நகைக் கடைகள், ஹோட்டல்கள் உள்ளன. மதுரை முனிச்சாலையில் உள்ள பழைய தினமணி தியேட்டர் ஆதீன மடத்துக்குச் சொந்தமானது. தற்போது இது காலியிடமாக உள்ளது. இங்கு மருத்துவமனை அமைக்க உள்ளதாக நித்தியானந்தா அறிவித்திருந்தார்.
ஆதீன மடத்துக்கு சொந்தமாக சுமார் 100 ஏக்கர் நிலம் அவனியாபுரத்தில் உள்ளது. விருதுநகர் மாவட்டம் ஆவியூர் அருகே குரண்டியில் சுமார் 650 ஏக்கர் நிலம் ஆதீன மடத்துக்குச் சொந்தமானது. இது தனியார் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. திருச்செந்தூர் மற்றும் மேலூரில் தனித்தனி கட்டிடங்கள் உள்ளன.
மதுரையை ஆண்ட மன்னன் கூன்பாண்டியன் 1200 ஏக்கர் நிலத்தை மதுரை ஆதீனத்துக்கு வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இதுதவிர தஞ்சாவூரில் உள்ள கஞ்சனூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் சொத்துகள் அதிகமாக உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே மதுரை ஆதீனத்தின் சொத்து மதிப்பு ரூ.1,300 கோடி இருக்கும் என, பக்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago