விருதுநகர் மாவட்டம் வத்திரா யிருப்பு அருகே நெல் கொள்முதல் செய்ய தாமதமாகிறது. மேலும் மழை காரணமாக களத்திலேயே நெல் மணிகள் முளைத்து வீணாகின்றன என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
ராஜபாளையம், வில்லிபுத்தூர், வத்திராயிருப்பு ஆகிய பகுதிகளில் சுமார் 1 லட்சம் ஹெக்டேரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் கோடை சாகுபடி முடிந்து நெல் அறுவடை செய்யப்படுகிறது.
விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் வத்திராயிருப்பு அருகே கான்சாபுரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு ரகம் வாரியாகப் பிரித்து மூட்டைக்கு ரூ.1,400 வரை விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
ஏராளமான விவசாயிகள் நெல்லை கொண்டு வந்து குவித்துள்ளனர். எடை போடுவதில் ஏற்படும் தாமதம் காரணமாக நெல் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும் தொடர் மழை காரணமாக களத்தில் உள்ள நெல் மணிகளும் மழையில் நனைந்து ஈரப்பதம் அதிகரிப்பதோடு முளைத்து விடுகின்றன.
அரசு நிர்ணயித்துள்ள நாள் ஒன்றுக்கு 800 மூட்டைகள் கூட கொள்முதல் செய்வதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். கூடுதல் நெல் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago