காரைக்குடி அருகே இறந்ததாகக் கூறப்பட்டவர் உயிரோடு வந்ததால், மகிழ்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்று கொண்டாடினர்.
காரைக்குடி அருகே கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னக்கண்ணு (46). இவரது மனைவி வளர்மதி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் 10 ஆண்டு களுக்கு முன்பு, கருத்து வேறு பாட்டால் மகன்கள், மகளுடன் அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். சின்னக்கண்ணு தனியாக வசித்து வந்தார். கூலி வேலை செய்து வந்த சின்னக்கண்ணு கரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் உணவின்றி சிரமப்பட்டார்.
இந்நிலையில் 10 மாதங்களுக்கு முன்பு, உறவினர்களிடம் கூறாமலேயே வீட்டை விட்டு வெளியேறினார்.
அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு, புலிகுத்தி கிராமம் அருகே ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து கல்லல் போலீஸார் விசாரித்தபோது, இறந்தவர் காணாமல்போன சின்னக்கண்ணு போன்று இருப்பதாக, அவரது உறவினர்கள் சிலர் தெரிவித்தனர்.
இதையடுத்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடலை போலீஸார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அவரது மனைவிக்கு உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சின்னகண்ணுவின் உடலை பெற சிவகங்கை அரசு மருத்துவ மனைக்கு மனைவி மற்றும் உறவினர்கள் செல்லத் தயாராக இருந்தனர்.
அப்போது திடீரென சின்னக் கண்ணு உயிரோடு வீட்டுக்கு வந்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த உறவினர்கள், சரக்கு வாகனத்தில் அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்று சின்னகண்ணு இறக்கவில்லை, உயிரோடுதான் உள்ளார் எனத் தெரிவித்தபடியே சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து சின்னக் கண்ணுவின் உறவினர்கள் கூறும்போது, அவர் தேவகோட்டை அருகே டி.நாகானியில் ஆடு மேய்த்து வந்துள்ளார். நாங்கள் தேடுவதை அறிந்து எதார்த்தமாக அவர் ஊருக்கு வந்துள்ளார்.
வீட்டில் அனைவரும் துக்கம் விசாரித்து கொண்டிருந்தபோது திடீரென அவர் உயிரோடு வந்ததால் முதலில் அதிர்ச்சியாக இருந்தது. பின்னர் மகிழ்ச்சி அடைந்தோம்.
மேலும் 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று வேளாங் கண்ணியில் வசித்து வந்த அவரது மனைவி, மகன்கள், மகள் ஒன்று சேர்ந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago