திருச்சி மாநகரில் 18- 44 வயதினர்1,445 பேருக்கு கரோனா தடுப்பூசி :

திருச்சி/ புதுக்கோட்டை: 18 வயது முதல் 44 வயது வரை உள்ள பத்திரிகை- பால் விநியோகம் செய்பவர்கள், தெருக்களில் விற்பனையில் ஈடுபடுவோர், மளிகைக் கடைகளில் வேலை செய்வோர், கரோனா தொற்றாளர்களுக்கு உணவு விநியோகம் செய்வோர், ஆட்டோ- டாக்ஸி ஓட்டுநர்கள், தனியார் பேருந்து ஓட்டுநர்- நடத்துநர்கள், போக்குவரத்துக் கழக ஊழியர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், கல்லூரி ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு அலுவலர்கள், பொதுத் துறை மற்றும் மத்திய கல்வி நிறுவன ஊழியர்கள் ஆகியோருக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாம் திருச்சி மாநகரில் நேற்று நடைபெற்றது.

தேவர் ஹால், கலையரங்கம் திருமண மண்டபம் மற்றும் மாநகராட்சியின் அரியமங்கலம், கோ.அபிஷேகபுரம், பொன்மலை, ரங்கம் ஆகிய 4 கோட்ட அலுவலகங்கள் என மொத்தம் 6 இடங்களில் இந்த தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த 6 முகாம்களிலும் தடுப்பூசி போட்டுக் கொள்ள பலர் ஆர்வமுடன் வந்திருந்தனர். முகாம்களில் மொத்தம் 1,445 பேருக்கு கரோனா தடுப்பூசி இடப்பட்டது.

இதேபோல, திருச்சி மாவட்டத்தில் 17 இடங்களில் ஆசிரியர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்களும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதுமட்டுமின்றி தனியாக பல்வேறு இடங்களில் 18 வயது முதல் 44 வயதினருக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில்... புதுக்கோட்டை மாவட்டத்தில் 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு 65 இடங்களில் நேற்று கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், 2,288 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE