பாசனப் பிரிவு அலுவலகங்களில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுமா? : புதுக்கோட்டை மாவட்ட காவிரிப் படுகை பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்பு

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரிப் படுகை பகுதியில் உள்ள பாசனப் பிரிவு அலுவலகங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கல்லணையில் இருந்து கல்லணைக் கால்வாய் வழியாக வரும் காவிரி நீர் புதுக்கோட்டை மாவட்டத்தில் 168 ஏரிகளில் தேக்கிவைக்கப்பட்டு, 25 ஆயிரம் ஏக்கரில் பாசனம் செய்யப்படுகிறது. இந்த நீர் விநியோகத்தை முறைப்படுத்துவதற்காக, தஞ்சாவூர் மாவட்டம் பேரவூரணியில் உள்ள துணைக் கோட்ட அலுவலகத்தின் கீழ் மொத்தம் 5 பாசனப் பிரிவு அலுவலகங்கள் உள்ளன.

இவற்றில் 2 பாசன பிரிவு அலுவலகங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆயிங்குடி மற்றும் நாகுடி ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், இவ்விரு அலுவலகங்களில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர், பாசன ஆய்வாளர், பாசன உதவியாளர்கள் ஆகிய பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கல்லணைக் கால்வாய் பாசன பகுதி விவசாயிகள் கூறியது: காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்களை தூர் வாரி மேம்படுத்துவதற்காக ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், புதுக்கோட்டை மாவட்டத்துக்கு 9 பணிகள் மூலம் 25.54 கிலோ மீட்டர் தொலைவுக்கு தூர் வார ரூ.83 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் முறையாகவும், தரமாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

எனவே, காலியாக உள்ள பேராவூரணி துணைக் கோட்ட அலுவலர், நாகுடி இளநிலை பொறியாளர், பாசன ஆய்வாளர் பணியிடங்களையும், 2 பாசன பிரிவு அலுவலகங்களில் காலியாக உள்ள 5-க்கும் மேற்பட்ட பாசன உதவியாளர் பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கூறியபோது, “காலிப் பணியிடங்களில் அலுவலர்களை உடனடியாக நியமித்து, பணிகளை முறையாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்