மூலனூர், வெள்ளகோவில் வட்டாரங்களில் - நோய் தாக்குதலால் தென்னை சாகுபடி பாதிப்பு : வேளாண் அலுவலர்கள் ஆய்வு

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டத்தில் 80 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில், மூலனூர் மற்றும் வெள்ளகோவில் வட்டாரங்களில் பூச்சி மற்றும் நோயால் அதிகளவில் தென்னைகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தென்னையைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்கள் குறித்து, திருப்பூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.மனோகரன், துணைஇயக்குநர் ஏ.வடிவேலு, உதவி இயக்குநர் நிர்மலா, பொங்கலூர்வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் என்.ஆனந்தராஜா, பயிர் பாதுகாப்புவிஞ்ஞானி பி.ஜி.கவிதா ஆகியோர் கொண்ட குழு ஆய்வு செய்தது.

இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, "தென்னையை தாக்கும் பூச்சிகளில் அதிக சேதத்தை ஏற்படுத்தக்கூடியது சிவப்பு கூன் வண்டு. இது பாதிக்கப்பட்ட மரங்களின் வேரின் மூலமாக 10 மி.லி. இமிடாகுளோபிரிட் மருந்தை 100 மி.லி. தண்ணீருடன் கலந்து 45 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தொடர்ந்து செலுத்த வேண்டும். மருந்து செலுத்தப்பட்ட பின்னர், 45 நாட்கள் கழித்துதான் காய்களை அறுவடை செய்ய வேண்டும். பிரமோன்பொறி ஹெக்டேருக்கு ஒரு பொறி அமைத்தும் கட்டுப்படுத்தலாம்.

அதேபோல, வாடல் நோய் தாக்கி இறந்த மரங்களை அப்புறப்படுத்த வேண்டும். வாழையை ஊடுபயிர் செய்வதன் மூலமாக, இதன் தாக்கத்தை குறைக்கலாம். மரத்தை சுற்றி வட்ட பாத்தி அமைத்து, தனித்தனியே நீர் பாய்ச்ச வேண்டும். வேப்பம்புண்ணாக்கு ஒரு மரத்துக்கு 5 கிலோ இட வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் 5 கிராம்காப்பர் ஆக்சி குளோரைடு கலந்து, நன்கு நனையுமாறு மரத்தை சுற்றி ஊற்ற வேண்டும். உயிரியல் பூஞ்சாணக்கொல்லிகளான டிரைகோடெர்மா விரிடி மற்றும் பேஸில்லஸ் சப்டிலிஸ் 100 கிராம் சாண எருவுடன் கலந்து மண்ணில் இடலாம்.

மேலும், விவரங்களுக்கு பொங்கலூர் வேளாண் அறிவியல் நிலையத்தை 04255- 296644, 296155 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்