மானியத் திட்டங்களில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு :

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகள் மானியத் திட்டங்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் மூலம் பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி, நுண்ணீர் பாசன முறையை அமைப்பதற்கு முன்வரும் சிறு, குறு விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனக் கருவிகள் அமைக்க 100 சதவீத மானியமும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படும். நுண்ணீர் பாசன முறையை அமைக்க முன்வரும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், நுண்ணீர் பாசன முறைக்காக வழங்கப்படும் மானியம் மட்டுமல்லாது, துணை நிலை நீர் மேலாண்மைப் பணிகளுக்கும் தோட்டக்கலைத் துறையின் முலம் மானியம் வழங்கப்படுகிறது.

பாதுகாப்பான குறு வட்டங்களில் குழாய் கிணறு, துளைக்கிணறு அமைக்க செலவிடப்படும் தொகையில் 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.25,000 டீசல் பம்பு செட், மின் மோட்டார் பம்புசெட் நிறுவ அதன் விலையில் 50 சதவீத மானியம், ரூ.15,000-க்கு மிகாமலும், வயலுக்கு அருகில் பாசன நீரை கொண்டு செல்லும் வகையில் நீர்பாசனக் குழாய் அமைக்க 50 சதவீத மானியத் தொகை ஹெக்டேருக்கு ரூ.10,000-க்கு மிகாமலும் வழங்கப்படும்.

இப்பணிகளுக்கான மானியம் நுண்ணீர் பாசனம் அமைத்து, மானியத் தொகை தொடர்புடைய நிறுவனங்களுக்கு விடுவிக்கப்பட்ட பின் இத்துணை நீர் மேலாண்மைக்கான மானியத் தொகை முழுவதும் விவசாயிகளின் சேமிப்பு கணக்குக்கு நேரிடையாக விடுவிக்கப்படும்.

மேற்கண்ட திட்டங்களில் பயன்பெறும் விரும்பும் விவசாயிகள், முக்கிய ஆவணங்களான குடும்ப அட்டை நகல், அடங்கல், கணினி சிட்டா, நிலவரைபடம், சிறு, குறு விவசாயிகளாக இருப்பின் அதற்கான வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட சான்று, உழவன் செயலி மற்றும் ‘TN-HORTNET’ செயலியில் பதிவு செய்யப்பட்ட நகல் ஆகியவற்றை, தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு உதகை தோட்டக்கலை உதவி இயக்குநர்-84896 04087, குன்னூர் தோட்டக்கலை உதவி இயக்குநர்- 63819 63018, கோத்தகிரி தோட்டக்கலை உதவி இயக்குநர்-94864 12544, கூடலூர் தோட்டக்கலை உதவி இயக்குநர்- 89034 47744 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்