மரவள்ளியில் மாவுப்பூச்சி தாக்குதல் காணப்பட்டால் அவற்றை ஒடித்து தீயிட்டு அழிக்க வேண்டும், என நாமக்கல் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் ஆண்டுதோறும் 18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளி சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது மரவள்ளியில் ஆங்காங்கே மாவுப்பூச்சி தாக்குதல் காணப்படுகிறது. இவற்றை கட்டுப்படுத்துவது குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து பரவியுள்ள இவ்வகை பூச்சிகளை கட்டுப்படுத்த ஒட்டுண்ணிகள் இல்லை. எனவே அனாகைரஸ் லோபஸி என்ற ஒட்டுண்ணியை இந்தியாவிற்கு கொண்டுவர பெங்களூரு தேசிய பூச்சிகள் ஆராய்ச்சி மையம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. தற்போது கரோனா தொற்று பரவல் காரணமாக அவற்றை வெளிநாடுகளில் இருந்து கொண்டுவர நீண்ட காலம் பிடிக்கும்.
எனவே, மாவுப்பூச்சி தாக்குதலுக்கு உள்ள செடிகளின் நுணிக் குருத்துகளை உடைத்து அவற்றை தீயிட்டு அழிக்க வேண்டும். பூச்சி தாக்குதல் ஆரம்ப நிலையில் இருக்கும்போது அசாடிரக்டின் 0.15 சதவீதம் என்ற பூச்சிக் கொல்லியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மி.லி., வீதம் மீன் எண்ணெய் ரோசின் சோப்பு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லி., வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
மாவுப்பூச்சி அதிகளவில் காணப்படும்போது பிலோனிக்காமிட் 50 டபிள்யுஜி என்ற மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.30 கிராம் வீதம் அல்லது தயாமீதாச்சும் 25 டபிள்யுஜி லிட்டருக்கு 0.50 கிராம் வீதம் அல்லது ஸ்பைரோடேடற்றாமேட் 1500 டி என்ற மருந்தை லிட்டருக்கு 1.25 மி.லி., கலந்து தேவையின் அடிப்படையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் தெளிக்க வேண்டும். காலை அல்லது மாலை வேளைகளில் மட்டுமே தெளிக்க வேண்டும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட பூச்சிக் கொல்லிகளை தெளிக்கக் கூடாது. கைத்தெளிப்பான் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் விவரம் பெற அருகே உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago