தஞ்சாவூர் மாவட்டத்தில் - கூடுலாக 500 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிக்கு ஏற்பாடு : மாவட்ட ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாநகராட்சி மகர்நோன்பு சாவடி பகுதியில் செயல்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை ஆட்சியர் ம.கோவிந்தராவ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா 2-வது அலையின் தாக்கம் காரணமாக, தொற்று அதிகளவில் உள்ளது. இந்த தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தொற்று கண்டறியப்பட்டுள்ளவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்க ஆலோசனை மையங்கள் அதிகளவில் தொடங்கியுள்ளோம்.

தஞ்சை மாவட்டத்தில் 3,340 பேர் கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது, 25 சதவீதம் படுக்கை வசதிகள் காலியாக உள்ளன. அதேபோன்று அறிகுறி உள்ளவர்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதால், 90 சதவீதம் படுக்கைகள் நிரம்பியுள்ளன. 10 சதவீதம் படுக்கைகளே காலியாக உள்ளன. கும்பகோணம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் தேவையான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, தொற்று ஏற்பட்டவர்களை அங்கு அனுமதித்து, சிகிச்சை அளித்து வருகின்றோம்.

மாவட்டத்தில் கரோனா தொற்று ஏற்பட்டு அறிகுறி உள்ளவர்களுக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்து வருகிறோம். தற்போது கூடுதலாக 500 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

மாவட்டத்தில் தற்போது வரை ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாத அளவுக்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். எனினும், நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருவதால், அனைத்துக்கும் தயார்நிலையில் இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதேபோல, தேவையான அளவு ஆக்சிஜன் சிலிண்டர்களை கையிருப்பில் வைத்திருக்கவும், அவை காலியான உடன் ஆக்சிஜன் தயாரிப்பு ஆலைக்கு அனுப்பி நிரப்பி வரவும் மாவட்ட அளவில் ஒரு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. தட்டுப்பாடு இல்லாத வகையில் ஆக்சிஜன் கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது 25 தனியார் மருத்துவமனைகளிலும் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டால், மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவுடன் தொடர்பு கொண்டு, தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டரை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

ஆய்வின்போது, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், கோட்டாட்சியர் வேலுமணி, சுகாதாரத் துறை துணை இயக்குநர் நமசிவாயம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE