ஒரத்தநாடு, அரவக்குறிச்சி பகுதிகளில் - வாகன சோதனையில் ரூ.3.2 லட்சம் பறிமுதல் : பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஆகிய பகுதிகளில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனை யில் ரூ.3.2 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்த நாடு அருகே உள்ள ராஜாளிவிடுதி சாலையில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பத்துபுள்ளிவிடுதி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜை நிறுத்தி சோதனையிட்டனர்.

இதில், அவரிடம் ரூ.1.76 லட்சம் ரொக்கம் இருந்தது தெரிய வந்தது. அவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்தப் பணத்தை உரம் வாங்கு வதற்காகக் கொண்டு செல்வதாக தெரிவித்தார். ஆனால், அதற்குரிய ஆவணங்கள் இல்லாததால், அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ஒரத்தநாடு தலைமையிடத்து துணை வட்டாட்சியர் நல்லதம்பியிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி பறக்கும் படை அலுவலர் பழனிகுமார் தலைமையிலான குழுவினர் தெத்துப்பட்டிகாட்டூர் பிரிவு சாலையில் நேற்று முன் தினம் இரவு வாகனத் தணிக் கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கரூர் வையாபுரி நகரைச் சேர்ந்த நந்தகுமார் என்பவரை நிறுத்தி சோதனையிட்டனர். இதில், அவர் உரிய ஆவணங்களின்றி ரூ.1,26,300 ரொக்கம் எடுத்துச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து, அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தவச்செல்வத்திடம் ஒப்படைத்தனர். பின்னர், அந்தப் பணம் சார்நிலை கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்