தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகத்தை தடுக்க தென் காசி மாவட்டத்தில் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
இதில், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டு, வட்டாட்சியர் அலுவலகங்கள் மூலம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப் பட்டன. பணம் வைத்திருந்தவர்கள் உரிய ஆவணங்களை காட்டி, திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் இதுவரை நடத்திய வாகன சோதனையில், 58 பேரிடம் இருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட ஒரு கோடியே 97 லட்சத்து 19 ஆயிரத்து 520 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு, கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதில், 30 பேர் பணத்துக்கு உரிய ஆவணங்களைக் காட்டியதால், அவர்களுடைய பணம் 88 லட்சத்து 73 ஆயிரத்து 733 ரூபாய் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
மீதம் உள்ள ஒரு கோடியே 8 லட்சத்து 45 ஆயிரத்து 787 ரூபாய் அரசு கருவூலத்தில் உள்ளது.
மேலும், சி விஜில் செயலி மூலம் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் தேர்தல் விதி மீறல் தொடர்பாக 17 புகார்கள் வந்துள்ளன. அவற்றின் மீது விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago