திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டப் பேரவை தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலரு மான வே.விஷ்ணு தெரிவித்தார்.
மாவட்டத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:
திருநெல்வேலி, பாளையங் கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டப் பேரவை தொகுதிகளிலும் 1,924 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகளில் பணியாற்ற தலா ஒரு வாக்குச்சாவடி தலைமை அலுவலர், தலா 3 வாக்குச் சாவடி அலுவலர்கள் உரிய ஆணைகளை பெற்றுக்கொண்டு வாக்குச் சாவடிகளுக்கு சென்றுள்ளனர்.
மொத்தமுள்ள வாக்குச் சாவடிகள் 157 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மண்டல அலுவலர் கள் மூலம் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், விவிபாட் மற்றும் வாக்குச் சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் துணை ராணுவப்படை மற்றும் உள்ளூர் போலீஸாரின் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படுகிறது.
உடனடி நடவடிக்கை குழு
தேர்தலுக்கான கடைசி நேரத்தில் பணம் விநியோகத்தை தடுக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவை தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும்படை குழுவினர் மற்றும் 3 நிலையான கண்காணிப்புக் குழுவினர் ஏற்கெனவே நியமிக்கப்பட்டு சுழற்சி முறையில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.தற்போது கூடுதலாக பாளையங்கோட்டை தொகுதிக்கு 4 உடனடி நடவடிக்கை குழுவும், ராதாபுரம் தொகுதிக்கு 7 உடனடி நடவடிக்கை குழுவும், திருநெல்வேலி, நாங்குநேரி மற்றும் அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தலா 1 உடனடி நடவடிக்கை குழுவும் நியமிக்கப்பட்டு சுழற்சி முறையில் கண்காணிப்பு செய்யப்படுகிறது.
இதுவரை பறக்கும்படை யினரின் சோதனையின்போது முறையான ஆவணங்களின்றி கொண்டு சென்று கைப்பற்றப் பட்டுள்ள பணம் மற்றும் பொருட்களின் மதிப்பு மொத்தம் ரூ.14 கோடி ஆகும்.
அம்பாசமுத்திரம், நாங்குநேரி தொகுதிகளில் வாக்காளர் களுக்கு பணம் பட்டுவாடா செய்யப் படுவதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றுமுன்தினம் புகார்கள் வரப்பெற்றன. இதுகுறித்து அம்பாசமுத்திரம் தொகுதிக்குரிய நிலையான கண்காணிப்புகுழு எண் 7-க்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, வாக்காளர் களுக்கு பணம் விநியோகம் செய்த 3 பேரிடமிருந்து ரூ. 32,000 பிடிபட்டது.
இது தொடர்பாக வி.கே.புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் நாங்குநேரி தொகுதிக்குரிய பறக்கும்படை கண்காணிப்புகுழு எண் 4-க்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, வாக்காளர் களுக்கு பணம் விநியோகம் செய்த 3 பேரிடமிருந்து ரூ.30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மூலக்கரைப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட ரொக்கம் மற்றும் பொருட்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகள் மற்றும் தொடர்புடைய நபர்களிடம் வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
இணையத்தில் பார்க்கலாம்
சி விஜில் செயலி மூலம் கிராமப் புற இளைஞர்களிடம் இருந்து ஏராளமான தகவல்கள் வந்துள்ளன. அவற்றின் அடிப்படையிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சமூக வலை தளங்களில் கருத்துகளை பதிவிடுவது தொடர்பாக தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக அமைக்கப்பட்ட குழுவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிப்பை மேற்கொள்கிறார்கள்.மாவட்டத்திலுள்ள 50 சதவீத வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவை நேரடியாக இணையதளம் மூலம் பார்க்கும் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப் படி செய்துள்ளோம். குறிப்பாக அனைத்து பதற்றமான வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவை இணையத்தில் நேரடியாக பார்க்கலாம். பதற்றமான வாக்குச் சாவடிகளுக்கு நுண்பார்வை யாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
90% தபால் வாக்குகள் சேகரிப்பு
மாவட்டத்தில் பாபநாசம், மாஞ்சோலை போன்ற பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கும், தொலைதூர கிராமப்புற வாக்குச் சாவடிகளுக்கும் வாக்குச்சாவடி அலுவலர்கள் செல்வதற்காக அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் பேருந்து வசதி செய்துதரப்பட்டுள்ளது. 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குகளை அவர்களது வீடுகளுக்கு சென்று பெறப்பட்டு வருகிறது. இதுவரை 90 சதவீதம் தபால் வாக்குகள் பெறப்பட்டிருக்கின்றன. எவ்வித புகாருக்கும் இடமின்றி இப்பணியை செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago