கோவை சிங்காநல்லூர் சர்க்கரை செட்டியார் நகரைச் சேர்ந்தவர் சிங்கை வி.பாரதி. ஐஎன்டியுசி அமைப்பு சாரா தொழிற்சங்கத்தின் பொதுச்செயலராக இருந்த இவர், கடந்த மாதம் 26-ம் தேதி உயிரிழந்தார். சிங்கை வி.பாரதிக்கு, அனைத்துக்கட்சி சார்பில் நினைவஞ்சலி கூட்டம் சிங்காநல்லூரில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.என்.கந்தசாமி தலைமைவகித்தார்.
இதில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கலந்துகொண்டு, சிங்கை வி.பாரதியின் மனைவி காந்திமதியிடம் ரூ.10 லட்சம் உதவித் தொகைக்கான காசோலையை வழங்கினார். மேலும் அவர்களது 14 வயதான மகன், 9 வயதான மகள் ஆகியோரின் கல்விச் செலவை தான் ஏற்றுக்கொள்வதாக கார்த்தி சிதம்பரம் அறிவித்தார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஐஎன்டியுசி மாநில பொதுச்செயலர் கோவை செல்வன், முன்னாள் கவுன்சிலர் ஷோபனா செல்வன் ஆகியோர் செய்திருந்தனர். இதில், திமுக மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ, என்.ஜி மருத்துவமனையின் தலைவர் ஜி.மனோகரன், காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் இருகூர் சுப்பிரமணியம், சிஐடியு மாவட்டத் தலைவர் பத்மநாபன், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago