தேர்தல் விதிமீறலை கண்காணிக்க சென்னையில் 112 குழுக்கள் அமைப்பு மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னையில் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் நடக்காமல் கண்காணிக்க 112 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் தேர்தலை நடத்துவது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார்அகர்வால் ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ரிப்பன்மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இத்தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் நடக்காமல் கண்காணிக்க 112 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றின் கண்காணிப்பு சேவையை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க 48 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 48 பறக்கும் படை குழுக்கள், 16 வீடியோகண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் செயல்பாடு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து குழுக்களிலும் மாநகராட்சி, வருவாய்த் துறை,காவல் துறை ஆகிய துறை அதிகாரிகள் இடம்பெற்றிருப்பார்கள்.

40 ஆயிரம் பணியாளர்கள்

சென்னை மாவட்டத்தில் மொத்தம் 5,911 வாக்குச்சாவடிகள் இருந்தன. தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி, 1000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளில் மொத்தம் 2,157துணைவாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் சென்னையில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 45 சதவீதம் உயர்ந்துள்ளது. தற்போது மொத்தம் 8,068 ஆக இது உயர்ந்துள்ளது. தேர்தல் பணியில் 29 ஆயிரம் வாக்குச்சாவடிஅலுவலர்கள் உட்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

தபால் வாக்கு

இந்த தேர்தலில் அனைத்துமாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், கரோனா தொற்று இருந்தாலோ, தொற்று இருப்பதாக சந்தேகிக்கும் நபராக இருந்தாலோ அவர்களுக்கு தபால் வாக்குகள் வழங்கப்படும்.

தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை பெற ரிப்பன் மாளிகையில் கட்டுப்பாட்டு அறைதிறக்கப்பட்டுள்ளது. 1950 என்றஇலவச எண்ணைத் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி இணை ஆணையர் பி.என்.தர்,துணை ஆணையர்கள் ஜெ.மேகநாத ரெட்டி, ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) ஃபெர்மி வித்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்