வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக்கோரி ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

By செய்திப்பிரிவு

தனக்கு எதிரான வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக்கோரி திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்தாண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய திமுக எம்பிஆர்.எஸ்.பாரதி, பட்டியலினத்தவர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக அவருக்கு எதிராக ஆதிதமிழர் மக்கள் கட்சி சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து அவர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ்போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதி பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

சென்னையில் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும் விசாரணைக்கு தடை கோரியும்ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி என்.சதிஷ்குமார் முன்பாக நடந்தது. அப்போது இந்த வழக்குகாலதாமதமாக அரசியல் உள்நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால் போலீஸ் தரப்பில்,மனுதாரர் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு பட்டியலின மக்களுக்கு எதிராகவும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராகவும் உள்ளது. இதுதொடர்பாக 30 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர் என வாதிடப்பட்டது.

மேலும் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக புகார் அளித்தவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு சமூக நல்லிணக்கம் மற்றும் சமுதாய ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. கருத்து சுதந்திரம் என்றபெயரில் மனுதாரர் பேச்சு ஏற்புடையதல்ல, என வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.சதிஷ்குமார், அறிவுப்பூர்வமான விவாதங்களை நடத்தாமல், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்கள், எதிர்தரப்பினர் மீது விஷம்கக்குவது வழக்கமாகி விட்டது.இது இளைய தலைமுறையினருக்கு நல்லதல்ல என அதிருப்தி தெரிவித்தார். மேலும் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் நிரூபணமாகிறதா, இல்லையா என்பதை ஆதாரங்களுடன் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டியது விசாரணை நீதிமன்றம்தான் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

குற்ற விசாரணை முறைச்சட்ட விதிகளைப் பின்பற்றி, இந்த விசாரணையை தினந்தோறும் நடத்தி, தாமதமின்றி வழக்கை முடிக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றத்துக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்