பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை மனதில் கொண்டு, போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு, பணிக்குத் திரும்ப வேண்டும். திமுக ஆட்சி அமைந்தவுடன் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக போக்குவரத்து துறையில் ஓய்வூதியதாரர்களுக்குப் பணப்பலன், 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையைத் தொடங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச, சிஐடியூ., ஏஐடியுசி. உள்ளிட்ட 9 தொழிற்சங்கக் கூட்டமைப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. முதல்வர் பழனிசாமியோ அல்லது போக்குவரத்துத் துறை அமைச்சரோ போராடும் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களை அழைத்துப் பேச மறுத்து வருவது கடும் கண்டனத்துக்குரியது.
பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் கோரிக்கை விடுத்தும்கூட, போக்குவரத்துக் கழக ஊழியர்களிடம் பேசுவதற்கு முதல்வர் பழனிசாமிக்கு நேரமில்லை. இந்தப் போராட்டத்தால் பொதுமக்களுக்கு நேரும் இன்னல்களை அதிமுக அரசு கண்டு கொள்வதாகவே தெரியவில்லை. ஆகவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு, பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை மனதில் கொண்டு, போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக மக்களின் பேராதரவுடன் திமுக ஆட்சி அமைந்தவுடன் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்ற உறுதியை இந்த நேரத்தில் அளிக்க விரும்புகிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முதல்வர் பழனிசாமியோ அல்லது போக்குவரத்துத் துறை அமைச்சரோ போராடும் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களை அழைத்துப் பேச மறுத்து வருவது கடும் கண்டனத்துக்குரியது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago