தருமபுரி மாவட்டத்தில் 400 பதற்றமான வாக்குச் சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கார்த்திகா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது:
தருமபுரி மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள் உள்ளிட்டவை, தேர்தல் அறிவிப்பு வெளியானதில் இருந்து குறிப்பிட்ட நேரத்துக்குள் அகற்றப்பட வேண்டும். அவ்வாறு அகற்றப்படவில்லை எனில் மாவட்ட நிர்வாகம் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அதற்கான செலவினங்கள் உரிய கட்சிகளிடம் இருந்து வசூலிக்கப்படும்.
ஊரகப் பகுதிகளில் தனியார் சுவர்களில் விளம்பரம் செய்ய சுவர் உரிமையாளரின் அனுமதியுடன், 3 நாட்களுக்கு முன்பாக உரிய சட்டப் பேரவைத் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் அனுமதி பெற வேண்டும். பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் விளம்பரங்கள் மேற்கொள்ள அனுமதி இல்லை.
முந்தைய தேர்தல்களின் அடிப்படையில் பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குச் சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் 344 பதற்றமான வாக்குச் சாவடிகளும், 56 மிகவும் பதற்றமான வாக்குச் சாவடிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் அமைதியாகவும், சுமூகமாகவும் தேர்தலை நடத்தத் தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் பிரச்சாரம் மேற்கொள்ள 41 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவ்விடங்களில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை நடத்த, அரசியல் கட்சியினர் அந்தந்த பகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முன் அனுமதி பெற வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் முறையாக பின்பற்றப்படுவதை கண்காணிக்கவும், ஆதாரம் இல்லாமல் பணம் எடுத்துச் செல்வதை கண்காணிக்கவும் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
5 சட்டப் பேரவை தொகுதிகளிலும் 24 மணி நேரமும் பணியாற்றும் வகையில் சுழற்சி முறையில் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் ஒரு சட்டப் பேரவை தொகுதிக்கு 3 பறக்கும் படை குழு, 3 நிலையான கண்காணிப்புக் குழு, 3 வீடியோ கண்காணிப்புக் குழு வீதம் குழுவினர் பணியாற்றுவர். இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்ட எல்லைகளில் 9 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சோதனைச் சாவடிகளில் நிலையான கண்காணிப்புக் குழுவினரும் இடம்பெற்றுள்ளனர். தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தெரிவிக்கலாம். அதேபோல, வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்ப 8903891077 என்ற எண்ணை பயன்படுத்தலாம்.
இவ்வாறு கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago