காங்கிரஸ்- திமுக கூட்டணி அரசை புதுச்சேரி மக்கள் விரும்பவில்லை மத்திய இணை அமைச்சர் கருத்து

By செய்திப்பிரிவு

புதுச்சேரியில் காங்கிரஸ்- திமுக கூட்டணி அரசை மக்கள் விரும்பவில்லை என மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்தார்.

காரைக்காலில் நேற்று, மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சரும், புதுச்சேரி மாநிலத்துக்கான பாஜக தேர்தல் பொறுப்பாளருமான அர்ஜூன் ராம் மேக்வால், மாநிலங்களவை உறுப்பினரும், தேர்தல் இணை பொறுப்பாளருமான ராஜிவ் சந்திரசேகர், பாஜக புதுச்சேரி மாநிலத் தலைவர் வி.சாமிநாதன், முன்னாள் அமைச்சர் ஏ.நமச்சிவாயம் ஆகியோர், செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, அர்ஜூன் ராம் மேக்வால் கூறியது:

புதுச்சேரி மாநில சட்டப்பேர வைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி யில் பாஜகவுக்கு ஆதரவான சூழ்நிலை உருவாகியுள்ளதை களத்தில் காண முடிகிறது. காங்கிரஸ்- திமுக கூட்டணி அரசை மக்கள் விரும்பவில்லை. பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். எனவே, பாஜக கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெற்று, மே மாதத்தில் ஆட்சி அமைக்கும் என்றார்.

முன்னாள் அமைச்சர் ஏ.நமச்சி வாயம் கூறியது: பாஜக தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராக உள்ளது. நாராயணசாமி தலைமையிலான அரசு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. இந்த அரசு மக்களுக்கு எந்த அளவுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது என்பதை செல்லுமிடங்களில் எல்லாம் மக்கள் சொல்லும்போது, நானும் அதில் ஒரு அங்கமாக இருந்துள்ளதை நினைத்து வேதனையடைகிறேன்.

புதுச்சேரியின் அனைத்துப் பிராந்தியங்களும் சமமான வளர்ச்சி பெற வேண்டும் என்பதே பாஜகவின் இலக்கு என்றார்.

பாஜக மாநிலத் தலைவர் வி.சாமிநாதன் கூறியது:

50 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசு புதுச்சேரி மாநிலத்துக்கு எதுவுமே செய்யவில்லை. புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு, மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தவில்லை. 5 ஆண்டுகள் ஒரு காங்கிரஸ் தலைவர் போலத்தான் அவர் நடந்துகொண்டார். காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும் நிலை உருவாகியுள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிப்பது குறித்து கட்சியின் தேசிய தலைமைதான் முடிவெடுக்கும். மக்களின் விருப்பம் எதுவோ அதற்கான குரலை புதுச்சேரி பாஜக எழுப்பும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்