திருவாரூர் விஜயபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர்களை மாற்றுப் பணி மூலம் இடமாற்றம் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருவாரூர் விஜயபுரத்தில் 50 ஆண்டுகள் பழமையான அரசு தாய்சேய் நல மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனை மூலம் தினந்தோறும் 300-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இம்மருத்துவமனையில் 6 பெண் மருத்துவர்களும், 1 மயக்கவியல் மருத்துவ நிபுணரும் பணியில் உள்ளனர். ஆனால், கடந்த 5 மாதங்களாக 2 பெண் மருத்துவர்கள் மட்டுமே மருத்துவமனையில் நிரந்தரமாக உள்ளனர். மற்ற 4 பெண் மருத்துவர்கள், திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு தாலுகா மருத்துவமனைகளுக்கு மாற்றுப்பணி அடிப்படையில் அனுப்பப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர்.
இதனால், கர்ப்பிணிகளும், குழந்தைகளும் உரிய சிகிச்சை பெற முடியாமல் அவதியுற்று வருகின்றனர். தற்போது, பணியில் உள்ள 2 மருத்துவர்களைக் கொண்டுதான் முழுநேரமும் சிகிச்சை அளிக்கப்படுவதால், அவர்களும் பணிச்சுமையால் திணறி வருகின்றனர். எனவே, திருவாரூர் விஜயபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர்களை மாற்றுப் பணி மூலம் இடமாற்றம் செய்வதை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago