இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வில் ஜமுனாமரத்தூர் மலை கிராமங்களில் இருந்து 24 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தி.மலை மாவட்டம் ஜமுனா மரத்தூர் மலை கிராமங்களில் உள்ள இளைஞர்கள் இரண்டாம் நிலை காவலர் பணி தேர்வில் பங்கேற்க மாவட்ட காவல் துறை சார்பில் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. வேலூர் சரக டிஐஜி காமினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின்பேரில் ஜமுனாமரத்தூர் அருகேயுள்ள குனிகாந்தனூர் கிராமத்தில் உள்ள உண்டி உறைவிட பள்ளியில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் கடந்த ஜனவரி மாதம் வரை பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில், ஆண்களும் பெண்களும் என மொத்தம் 150 பேர் பங்கேற்றனர். வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற பயிற்சியில் சிறப்பு பயிற்சியுடன் உணவும் வழங்கப்பட்டது. போளூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன், மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் ஆகியோர் மேற்பார்வை யில் ஆசிரியர்கள் ரமேஷ் மற்றும் சுரேஷ் ஆகியோர் பயிற்சி அளித்தனர். காவலர் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில், ஜமுனாமரத்தூர் மலை கிராமங்களில் இருந்து தேர்வு எழுதிய 150 பேரில் 14 ஆண்கள், 10 பெண்கள் உட்பட 24 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதுகுறித்து போளூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன் கூறும்போது, ‘‘இவர்களில் பெரும்பாலானவர்கள் உடற்தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்று விடுவார்கள் என்பதால் இந்தாண்டு ஜமுனாமரத்தூர் மலை கிராமங்களில் இருந்து அதிக நபர்கள் காவலர் பணிக்கு சேர வாய்ப்புள்ளது.
இதன்மூலம் மலை கிராம மக்களின் பொருளாதாரம் மேம்படும். இதுவரை காவலர் தேர்வில் 2 அல்லது 3 பேர் தான் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இந்தமுறை அளிக்கப்பட்ட சிறப்பு பயிற்சியால் அதிகம்பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்’’ என தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago