கந்தர்வக்கோட்டை அருகே முறையாக நெல் கொள்முதல் செய்யாததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே முறையாக நெல் கொள்முதல் செய்யப்படாததைக் கண்டித்து விவசாயிகள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கந்தர்வக்கோட்டை அருகே புதுப்பட்டி ஊராட்சியில் சிவந்தான்பட்டி சமத்துவபுரம் பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த நிலையத்துக்கென பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. வேறு ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் பணியாளர் அவ்வப்போது வந்து நெல் கொள்முதல் செய்துள்ளார்.

தினந்தோறும் நெல் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் அடுக்கி வைத்திருந்த நெல் மூட்டைகளில் இருந்த நெல்மணிகள் முளைத்தும், சாக்குகள் கிழிந்து சிதறியும் வீணாகின.

இதைக் கண்டித்தும், பணியாளர்களை நியமித்து உடனே நெல் கொள்முதல் பணியை தொடங்க வேண்டும் என வலியுறுத்தியும் சமத்துவபுரம் பகுதியில் விவசாயிகள் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் புவியரசன், காவல் ஆய்வாளர் சிங்காரவேல், கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டியன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, பணியாளர்கள் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

இதனால், கந்தர்வக்கோட்டை- பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்