நாகரசம்பட்டியில் உள்ள சேதமான நிழற்கூடத்தை அகற்றிவிட்டு, புதியதாக அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது தேவைக்காக நாகரசம் பட்டிக்கு வந்து செல்கின்றனர். நாகரசம்பட்டியில் பேரூராட்சி அலுவலகம், வங்கிகள், அரசு மகளிர் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகள், காவல் நிலையம், மின்வாரிய அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதற்காக நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட மக்கள், பேருந்துகள் மூலம் நாகரசம் பட்டிக்கு வந்து செல்கின்றனர். அவ்வாறு வந்து செல்லும் பொதுமக்கள் நிழலில் காத்திருந்து பேருந்து பயணம் மேற்கொள்ள வசதியாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிழற்கூடம் கட்டப்பட்டது. இந்த நிழற்கூடம் போதிய பராமரிப்பு இல்லாததால், விழும் நிலையில் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக கேஆர்பி அணையின் இடதுபுற கால்வாய் நீட்டிப்பு பயனாளிகள் சங்கத்தின் தலைவர் சிவகுரு கூறும்போது, ‘‘நிழற்கூடம் சேதமாகி, கட்டிடத்தின் மேற்கூரையில் சிமென்ட் சிலாப்கள் பெயர்ந்து கம்பி வெளியே தெரிகிறது. இதனால் பயணிகள் அச்சத்துடன் நிற்க வேண்டி உள்ளது. மேலும், வெயில், மழைக்காலங்களில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
சேதமான நிழற்கூடத்தை அகற்றிவிட்டு, புதிய நிழற்கூடம் அமைக்க வேண்டும் என பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சேதமான நிழற்கூடம் விழுவதற்குள் அகற்ற தொடர்புடைய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago