தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நகராட்சிக்கு சொந்தமான தினசரி சந்தை இயங்கி வருகிறது. இங்கு 32 கடைகள் உள்ளன. நகராட்சி சார்பில் அந்த கடைகள் அனைத்தும் சில்லறை வியாபாரத்துக்கு குத்தகை முறையில் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இருப்பினும் சந்தை அருகில் உள்ள அம்பேத்கர் தெரு, முப்புடாதி அம்மன் கோயில் முன்பு, பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் பலர் ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறும்போது, “நகரின் மையப்பகுதியில் உள்ள கடையநல்லூர் சந்தைக்கு காலை நேரத்தில் லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் விளைபொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சில்லறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் வாகனங்களில் வந்து வாங்கிச் செல்கின்றனர். இதனால் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை கடுமையான நெரிசல் ஏற்படுகிறது.
சந்தைக்கு அருகில் உள்ள அம்பேத்கர் தெரு, முப்புடாதி அம்மன் கோயில் முன்பு, பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் 8 அடி நீளத்துக்கு சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து கூரைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் உள்ள முப்பிடாதி அம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களுக்கும் இடையூறாக உள்ளது.
மேலும், அங்கு உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்வ தற்கு இடையூறு ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண நகருக்கு வெளியே சந்தையை இடமாற்றம் செய்ய வேண்டும்” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago