பிரதமர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நெல் பயிருக்கு காப்பீடு செய்ய பிப். 1-ம் தேதி கடைசி நாள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தகவல்

By செய்திப்பிரிவு

பிரதமர் பயிர்காப்பீடு திட்டத்தின் கீழ், எள் பயிருக்கு காப்பீடு செய்ய ஜனவரி 31-ம் தேதியும், நெல், மக்காச்சோளம் மற்றும் நிலக்கடலைக்கு காப்பீடு செய்ய பிப்ரவரி 1-ம் தேதியும் கடைசி நாளாகும், என ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆட்சியர் கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நடப்பு ரபி பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய, நெல்-3(நவரை), மக்காச்சோளம்-3, நிலக்கடலை, கரும்பு மற்றும் எள் ஆகிய பயிர்கள் பிர்கா அளவில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பிர்காக்களின் கீழ் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளும் பிரதமரின் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.

நடப்பு ரபி பருவத்தில் நெல்-3 (நவரை) பயிருக்கு ஏக்கருக்கு ரூ.502.50, மக்காச்சோளம்-3 பயிருக்கு ரூ.439.50, நிலக்கடலை பயிருக்கு ரூ.443.25, கரும்பு பயிருக்கு ரூ.2875, எள் பயிருக்கு ரூ.196.50 பிரீமியத் தொகையாக செலுத்த வேண்டும். எள் பயிருக்கு ஜனவரி 31-ம் தேதியும், நெல்-3 (நவரை), மக்காச்சோளம்-3, நிலக்கடலை ஆகிய பயிர்களுக்கு பிப்ரவரி 1-ம் தேதியும், கரும்பு பயிருக்கு அக்டோபர் 31-ம் தேதியும் பிரீமியம் செலுத்த கடைசி நாளாகும்.

இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள், தாங்கள் பயிர் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ தங்கள் விருப்பத்தின் பேரில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை காப்பீடு செய்து கொள்ளலாம். கடன்பெறா விவசாயிகள், நடப்பு பசலி ஆண்டுக்கான அடங்கல் அல்லது பயிர் சாகுபடி சான்றை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று அதனுடன், சிட்டா, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல், ஆதார்அட்டை நகல் ஆகியவற்றை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசிய வங்கிகள் அல்லது பொது சேவை மையங்கள் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம், எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்