சத்தியமங்கலம் அருகே மான் வேட்டையாடிய 4 இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் விளாமுண்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட உங்கனூரான்குட்டை வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மல்லியம்பட்டி செல்லும் சாலையின் அருகே உள்ள முட்புதரில் இருந்து 4 பேர் சாக்கு மூட்டையுடன் சென்றனர். அவர்களைப் பிடித்து விசாரித்தனர். அவர்கள் கொண்டு வந்த சாக்கு மூட்டையை சோதனை செய்தபோது, அதில் ஆண் புள்ளிமானின் தலை, கால் மற்றும் இறைச்சி ஆகியவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கணக்கரசம் பாளையம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து, ரமேஷ், பழனிசாமி மற்றும் குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்த ரவி என்பது தெரியவந்தது. இவர்கள் விளாமுண்டி வனப்பகுதியை ஒட்டி உள்ள மல்லியம்பட்டி அருகே உள்ள முட்புதர்களில், சுருக்கு கம்பிகள் வைத்து புள்ளி மானை வேட்டையாடியதும், அதனை துண்டு துண்டாக வெட்டி சாக்கு பையில் மூட்டை கட்டி எடுத்து வந்ததும் தெரியவந்தது.
மாவட்ட வன அலுவலர் மற்றும் துணை இயக்குநர் உத்தரவின் பேரில் மானை வேட்டையாடிய நால்வருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago