5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர், பெரம்பலூர் ஆகிய இடங்களில் அரசு மருத்துவமனை செவிலியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு அரசு அறிவித்தபடி ஒரு மாத ஊக்க ஊதியம், கரோனாவால் பாதிக்கப்பட்ட செவிலியர்களுக்கு நிவாரணம், கரோனா பணியின்போது உயிரிழந்த செவிலியர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வருங்காலங்களில் தொகுப்பூதிய முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியம், படிகள் வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப செவிலியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்ற 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை முன்பு தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கத்தினர் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த மாநில பொதுச் செயலாளர் வளர்மதி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியபோது, “கோரிக்கைகள் நிறைவேறும்வரை எங்களின் போராட்டம் தொடரும். அதேநேரத்தில், போராட்டத்தால் பணிகள் பாதிக்கப்படாது” என்றார். இதேபோல, மாவட்டம் முழுவதும் பல இடங்களில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் 1,200 செவிலியர்கள் கலந்துகொண்டனர்.

பெரம்பலூரில்...

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்பு தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கத்தைச் சேர்ந்த செவிலியர்கள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு, அரசு தலைமை மருத்துவமனை செவிலி யர் கண்காணிப்பாளர் மல்லிகா தலைமை வகித்தார்.

காரைக்காலில்...

புதுச்சேரி நலவழித் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். மாத ஊதியத்தை தடையின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுகாதார செவிலியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் நலவாழ்வு சங்கத்தினர் நேற்று ஒருநாள் விடுப்பு எடுத்து, காரைக்கால் மாவட்ட நலவழித் துறை துணை இயக்குநர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் காயத்ரி தலைமை வகித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்