திமுக ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் மனுக்கள் பெட்டியின் பூட்டை நானே திறந்து நடவடிக்கை எடுப்பேன் வேலூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி

By செய்திப்பிரிவு

திமுக ஆட்சிக்கு வந்ததும் பொது மக்கள் அளித்த மனுக்களின் பெட்டியின் பூட்டை நானே திறந்து 100 நாட்களில் நடவடிக்கை எடுப்பேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

வேலூர் மாநகர திமுக அலுவலக வளாகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரின் திருவுருவச் சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை திறந்து வைத்தார். பின்னர், அண்ணா கலையரங்கம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘வேலூர் வீரம், விவேகம், சுதந்திரபோராட்டத்துக்கு பெயர் பெற் றது. இப்படியான ஊரில் அண்ணா, கலைஞர் சிலை திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஜெயலலிதா நினைவிடம் திறந்து வைக்கப்பட்டது. கொள்கையில், லட்சியத்தில் மாறுபாடு இருந்தாலும் அதை விமர்சிக்க நாங்கள் தயாராக இல்லை.

ஜெயலலிதா மருத்துவ மனையில் இருந்தபோது இட்லி சாப்பிட்டார் என்ற அறிக்கையை தவிர உறுப்படியான அறிக்கை எதுவும் வரவில்லை. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய ஓ.பி.எஸ் இதுவரை விசாரணை ஆணையத்தின் முன்பாக ஆஜராகாமல் உள்ளார்.

ஜெயலலிதா மறைந்து 4 ஆண்டுகள் ஆன நிலையில் அவருக்கு பதிலாக முதல்வர் பொறுப்பை ஏற்றவர் ஓ.பி.எஸ். எங்களைப் பார்த்து சிரித்ததால் அவரது பதவி பறிக்கப்பட்டதாக காரணம் சொல்லப்பட்டது.

பின்னர், சசிகலா முதல்வராக ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருந்த போது, சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பு வந்தது. ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் அவரும் ஜனவரி 27-ம் தேதி தான் விடுதலையாகி இருப்பார். ஆனால், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மட்டும் தண்டனை பெற்றனர்.

சசிகலா சிறைக்கு சென்றதால் தரையில் ஊர்ந்து முதல்வர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி. இதை சொன்னால் அவருக்கு கோபம் வரும். நான், எடப்பாடி பழனிசாமியிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான். நீங்கள் ஊர்ந்து வந்தது உண்டா, இல்லையா? என்பதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.

ஜெயலலிதா மரணத்தை கண்டுபிடிக்கவில்லை. அப்படி இருக்க அவரது நினைவு இல்லத்தை மட்டும் திறக்க என்ன தகுதி இருக்கிறது. வரும் தேர்தலில் அதிமுக டெபாசிட் வாங்க கூட முடியாத நிலை உள்ளது. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் மக்களின் அடிப்படை பிரச்சினை தீர்க்கப்படும். அதனால்தான் மக்கள் கொடுத்த மனுக்களை பெட்டியில் போட்டு பூட்டி அந்த சாவியை என்னுடைய சட்டைப் பையில் வைத்துள்ளேன். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதை நானே திறந்து, 100 நாட்களில் நடவடிக்கை எடுப்பேன்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்