திருப்பூரில் குடியிருப்புப் பகுதி அருகேயுள்ள திடக்கழிவு மேலாண்மைக் கூடத்தை இடமாற்றம் செய்யக் கோரி மாநகராட்சி முதலாம் மண்டல அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி 9-வது வார்டு குமரானந்தபுரம் புகழும் பெருமாள்புரம் 1 முதல் 4 வீதிகளில் 1000-க்கும் மேற்பட்ட மக்கள்வசித்து வருகின்றனர். அப்பகுதியில் மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மைக் கூடம் அமைத்து குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கிடங்கு செயல்படத் தொடங்கிய மூன்று மாதத்தில் குடியிருப்புப் பகுதியில் ஈ மற்றும் கொசுக்கள் தொல்லை, துர்நாற்றம், சுகாதாரக் கேடு என பல்வேறு பிரச்சினைகளை சந்திப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த கூடத்தை அங்கிருந்து மாற்றுப்பகுதிக்கு இடமாற்றம் செய்யவும், மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஏற்கெனவே தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், புகழும் பெருமாள்புரம் பகுதி பொதுமக்கள் மாநகராட்சி முதலாம் மண்டல அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். திமுக செயலாளர் க.நடராஜன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது குப்பைக்கிடங்கில் இருந்து துர்நாற்றம், பூச்சிகள் வராமல் தடுக்க மருந்து தெளித்து உரிய ஏற்பாடு செய்வதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் திடக்கழிவு மேலாண்மைக் கூடத்தை அங்கிருந்து இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டு, அனைவரும் கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago