உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது

By செய்திப்பிரிவு

உடுமலை ஒன்றியம் புங்கமுத்தூர் ஊராட்சியில் க.பெரியகாளிமுத்து, மடத்துக்குளம் ஒன்றியம் கடத்தூர் ஊராட்சியில் ப.கண்ணையன் ஆகிய இருவரும் தூய்மைப் பணியாளர்களாக பல ஆண்டு காலம் பணியாற்றி கடந்த 2019- ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி ஓய்வு பெற்றனர். அவர்களுக்கு அரசாணை எண் 348-ன் படி, வழங்க வேண்டிய ரொக்கத் தொகைரூ.50000, மாத ஓய்வூதியம் ரூ.2000 ஆகியவற்றை 19 மாதங்களாகியும் இதுவரை வழங்கப்படவில்லை.

இதற்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் உரிய உத்தரவு பிறப்பித்து பணத்தைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் திருப்பூர் மாவட்ட ஊரக உள்ளாட்சித் துறை ஊழியர்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் தலைமையில் பாதிக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் திருப்பூரில் ஆட்சியர் அலுவலகம்எதிரில் நேற்று காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர்.

சில மணி நேரங்களில் அங்கு வந்த தெற்கு போலீஸார், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக 11 ஆண்கள், 11 பெண்கள் என 22 பேரை கைது செய்தனர். தனியார் மண்டபத்தில் அனைவரும் சிறை வைக்கப்பட்ட நிலையில், கோரிக்கை நிறைவேறும்வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என அறிவித்தனர். போலீஸார் வழங்கிய மதிய உணவையும் புறக்கணித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்