திருப்பூர் முருகம்பாளையத்தில் டாஸ்மாக் மதுக்கடையை மூட ஆட்சியர் விதித்த காலக்கெடு முடிந்தும் கடையை மூடாததைக் கண்டித்து நேற்று சாலைமறியல் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
திருப்பூர் முருகம்பாளையம் ஊரின் மையப் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் பயனில்லாததால், டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து டிசம்பர் 29-ம் தேதி டாஸ்மாக் மதுபானக் கடையை அங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்றுவதாக எழுத்துப்பூர்வமாக ஆட்சியர் உறுதியளித்தார். அதில் 15 நாட்களில் முருகம்பாளையம் டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யபடும் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. காலக்கெடு முடிந்த நிலையில் டாஸ்மாக் கடை நேற்றும் திறக்கப்பட்டு விற்பனை நடந்தது.
இதைக் கண்டித்து கடையின் முன்புள்ள சாலையில் அப்பகுதி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது,ஆட்சியரின் கடித நகலைக் காட்டி கடையை மூடும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என பொதுமக்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago