தஞ்சாவூரில் தனியார் பேருந்து மின்கம்பி மீது உரசி 4 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் கோவிட் தடுப்பூசி வழங்கும் முகாம் அமைப்பது குறித்த ஆய்வு கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனா வைரஸ் தடுப்பூசி அளிப்பது தொடர்பாக மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டுதல்கள் கடைபிடிக்கப்பட்டு நடத்தப்படும். நாமக்கல் மாவட்டத்தில் 7 இடங்களில் முகாம் அமைத்து தடுப்பூசி போடப்படும். அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தஞ்சாவூரில் தனியார் பேருந்து மின்கம்பியில் உரசியதால் 4 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. பேருந்து சென்ற சாலையில் சீரமைப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. மழை பெய்ததால், மணல்திட்டு மீது பேருந்து ஏறி இறங்கியது. இதனால் மின்கம்பி உரசியதில் விபத்து ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தச் சம்பவத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் கரோனா தடுப்பூசி வழங்கும் முகாம் குறித்து கலந்தாலோசனை நடைபெற்றது. சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா, எம்எல்ஏ கே.பி.பி. பாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago