கீழ்பவானி பாசனப்பகுதியில் பொங்கலுக்குப் பின் அறுவடைப் பணிகள் தொடங்கவுள்ளதால், மாவட்ட நிர்வாகம் நெல் கொள்முதல் மையங்களை திறக்க வேண்டுமென கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கீழ்பவானி விவசாயிகள் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம், சங்கத் தலைவர் செ.நல்லசாமி தலைமையில் ஈரோட்டில் நடந்தது. சங்கத்தின் செயலாளர் த.கனகராஜ், மு.ரவி. ஏ.கே. சுப்பிரமணியம், ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஈ.வீ.கே.சண்முகம், இயற்கை வாழ்வுரிமை இயக்க அமைப்பாளர் பொடரான் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
நடப்பு ஆண்டில் வழக்கத்திற்கு மாறாக ஜனவரி மாதத்தில் தொடர்ந்து மழை பொழிந்து கொண்டு வருகின்றது. ஈரம் காயாத காரணத்தால் கீழ்பவானிப் பாசனத்தில் விளைந்திருக்கும் நெல் அறுவடையும், கடலை விதைப்பும் தாமதமாகி வருகின்றது. இந்த நிலையில், இதைப்பற்றிய புரிதல் இல்லாமல் ஜனவரி 7-ம் தேதி கடலை முதல் நனைப்பிற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நீர் முற்றிலுமாக பயன்பாடு இல்லாமல் போவதுடன் அறுவடையையும் விதைப்பையும் தாமதப்படுத்தும்.
இந்த பாதிப்பை கருதியும், நீரை சேமிக்கும் விதமாகவும் தற்போது திறக்கப்பட்டுள்ள நீரை நிறுத்தி, மே மாதம் நீர் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீழ்பவானி பாசனப்பகுதியில் பொங்கலுக்குப் பின்னர் நெல் அறுவடை முழுவீச்சில் நடைபெறும் என்பதால், இப்பகுதியில் மாவட்ட நிர்வாகம் நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாகத் தொடங்க வேண்டும். கீழ்பவானி வாய்க்காலை கான்கிரீட் கால்வாயாக மாற்றினால் சூழல் கெடும். நிலத்தடி நீர் செறிவூட்டுதல் நின்று போகும். இவற்றை கருத்தில் கொண்டு அரசு கான்கிரீட் கால்வாய் திட்டத்தை கைவிட வேண்டும். இதை வலியுறுத்தி பிப்ரவரி 12-ம் தேதி சென்னிமலையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago