பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து 61,664 கனஅடி தண்ணீர் திறப்பு தாமிரபரணி கரையோர குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது வீடுகள், உறைகிணறுகள், பயிர்கள் சேதம்- மக்கள் வெளியேற்றம்

By செய்திப்பிரிவு

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து 61,664 கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டதால், கரையோரத்தில் உள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் கடந்த சில நாட்களுக்குமுன் நிரம்பியதால், உபரி நீர் திறந்துவிடப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 4 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால், அணைகளுக்கு நீர்வரத்து பெருமளவு அதிகரித்தது. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து நேற்றுமுன்தினம் இரவில் 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் தாமிரபரணியில் திறந்துவிடப்பட்டது. அதிகப்படியான தண்ணீர் திறக்கப்பட்டதால் ஆற்றங்கரையோரத்தில் உள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

வெள்ளத்தில் மிதந்த வீடுகள்

திருநெல்வேலியில் தாமிரபரணி கரையோரத்தில் கருப்பந்துறை, மீனாட்சிபுரம், கைலாசபுரம், வண்ணார்பேட்டை ஆகிய பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. வண்ணார்பேட்டையில் எட்டுத்தொகை தெரு, திருக்குறிப்பு தொண்டர் தெரு, இசக்கியம்மன் கோயில் தெரு ஆகிய இடங்களில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மிதந்தன. அப்பகுதி மக்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர். ரப்பர் படகுகள் மூலம் கால்நடைகளும் மீட்கப்பட்டன.

தொடர் மழையால் மாவட்டத்தில் 3 வீடுகள், தாமிரபரணி கரையோரத்தில் கூட்டு குடிநீர் திட்டத்தில் அமைக்கப்பட்ட சில உறை கிணறுகள் சேதமடைந்தன.

சேரன்மகாதேவி, திருப்புடைமருதூர், வைராவிகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும், திருநெல்வேலி அருகே கொண்டாநகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தாமிரபரணி கரையோர வயல்களிலும் வெள்ளம் புகுந்ததால், நெற்பயிர்கள் மூழ்கின.

திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோயிலின் கோபுரத்தை மூழ்கடிக்கும் அளவுக்கு தண்ணீர் தாமிரபரணியில் பெருக்கெடுத்தது.

அமைச்சர் ஆய்வு

மேலப்பாளையம்- டவுன் சாலையிலுள்ள கருப்பந்துறை ஆற்றுப் பாலத்தை ஒட்டி தண்ணீர் பாய்வதால், அச்சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. சேரன்மகாதேவி பகுதியில் ஏற்பட்ட மழை பாதிப்பு, மணிமுத்தாறு அணைப்பகுதியை அமைச்சர் வி.எம். ராஜலெட்சுமி நேற்று ஆய்வு செய்தார். நேற்று மாலையில் 61,664 கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்