தென்னை வளர்ச்சி வாரியத்தின் மறுவாழ்வு மற்றும் மறுநடவுத் திட்டத்தின் கீழ் பூச்சி மற்றும் நோய் தாக்கிய மரங்கள் வெட்டி அகற்றும் பணி கடலூர் வட்டாரத்தில் நடைபெற்றது.
கடலூர் வட்டாரத்தில் 650 ஹெக்டேரில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. தென்னை வளர்ச்சி வாரிய நிதி மற்றும் தமிழக அரசு பங்களிப்புடன் பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு உட்பட்ட தென்னை மரங்கள், காய்ந்த பட்டுப்போன வயது முதிர்ந்த காய்க்கும் திறன் அற்ற மரங்கள் வெட்டி அகற்றப்படும். அந்த இடத்தில் புதிய தென்னங்கன்றுகளை நட்டு பாராமரிக்கப்படும். ஒரு மரத்தை வெட்டி அகற்ற தலா ரூ.1,000 வீதம் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் பின்னேற்பு மானியமாக செலுத்தப்படும்.
கடலூர் வட்டாரத்தில் பூச்சி தாக்கிய, வயது முதிர்ந்த குறைபாடுடைய தென்னை மரங்களை வெட்டி அகற்றும் பணி சேடப்பாளையம் மற்றும் சங்கொலிக்குப்பம் கிராமங்களில் நேற்று முன்தினம் முதல் நடைபெற்று வருகிறது.
கடலூர் வேளாண் இணை இயக்குநர் முருகன் இப்பணிகளை நேற்று முன்தினம் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். கடலூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் பூவராகன் தென்னை வளர்ச்சி வாரிய மறுநடவு மற்றும் மறுவாழ்வு திட்ட கூறுகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். கடலூர் வேளாண் அலுவலர் சுகன்யா, உதவி வேளாண் அலுவலர் சங்கரதாஸ் ஆகியோர் இதற்கான ஒருங்கிணைப்புகளை செய்திருந்தனர்.
மற்ற கிராமங்களிலும் தென்னை விவசாயிகள் நோய் மற்றும் பூச்சி தாக்கிய, காய்க்கும் திறன் அற்ற மரங்களை அகற்ற முன்கூட்டியே தீர்மானித்து மரங்களுக்கு உரிய எண்கள் இட்டு வைக்க வேண்டும். இதனால் சம்பந்தப்பட்ட உதவி வேளாண் அலுவலர்கள் நேரில் பணிகளை மேற்பார்வையிடவும், மானிய விண்ணப்பங்களை துரிதமாக பரிசீலிக்கவும் இயலும் என்றும் விவசாயிகளுக்கு விளக் கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago