கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் சுற்றித் திரியும் குதிரைகளால் விபத்து அபாயம்

By செய்திப்பிரிவு

கோவையில் இருந்து மேட்டுப் பாளையம் செல்லும் சாலையில், கட்டுப்பாடின்றி சுற்றித் திரியும் குதிரைகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர் கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவையில் வாகனப் போக்குவரத்து அதிகமுள்ள சாலைகளில் மேட்டுப்பாளையம் சாலையும் முக்கியமாகும். பள்ளிகள், கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள், கடைகள், குடியிருப்புகள், கோயில்கள் அதிகம் உள்ளதால், ஏராளமானோர் இந்த சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், மேட்டுப்பாளையம், உதகை, கோத்தகிரி, குன்னூர் போன்ற பகுதிகளுக்குச் செல்வோர் இந்த சாலையின் வழியாகவே பயணிக்க வேண்டும். இதனால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இச்சாலையில் சென்று வருகின்றன.

இந்நிலையில், இந்த சாலையில் ஏராளமான கால் நடைகள் சுற்றித் திரிவதால் விபத்து அபாயம் நிலவுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்புச் சங்கச் செயலர் எம்.தேவேந்திரன் கூறியதாவது: மேட்டுப்பாளையம் சாலையில் ஆடு, மாடு மற்றும் குதிரைகள் அதிக அளவில் சுற்றி வருகின்றன. குறிப்பாக, கட்டுப்பாடின்றி குதிரைகள் சுற்றித் திரிகின்றன. வாகனங்கள் செல்லும் சாலையிலேயே இவை நடந்து செல்கின்றன.

மேலும், சில நேரங்களில் சாலையிலேயே படுத்துக் கொள்கின்றன. வாகன ஹார்ன் ஒலி எழுப்பி அவற்றை விரட்ட முயற்சித்தாலும், அங்கிருந்து செல்வதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.

தற்போது இந்த சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி காரணமாக, சாலை குறுகியுள்ளது. இதனால், ஏற்கெனவே வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் செல்லும் சூழல் உள்ளது. பல நேரங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

இதற்கிடையில், கால் நடைகளும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளன. எனவே, மாவட்ட, மாநகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை மேற்கொண்டு, சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளைப் பிடித்துச் செல்வதுடன், அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

தொடர்ந்து இதுபோல் நடைபெறாமல் இருக்க, கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விபத்து ஏற்பட்டால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்த்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்