தருமபுரி மாவட்டம் தொப்பூரில் முன்னால் சென்ற லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் 11 பேர் காயமடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் செல்வகுமார் (42). இவர் லாரியில் ஆந்திராவில் இருந்து கேரள மாநிலத்துக்கு எருமை மாடுகளை ஏற்றிச் சென்றார். இவருடன், லாரியில் திண்டுக்கல் மாவட்டம் தேவகோட்டம்பட்டியைச் சேர்ந்த அசோக்குமார் (40), ஆந்திராவை சேர்ந்த பாரூக், நூர்பாஷா, மெகபூபாஷாஆகியோர் வந்தனர்.
தருமபுரி - சேலம் நெடுஞ்சாலையில் தொப்பூர் அருகே நேற்று அதிகாலை லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது, பின்னால் பெங்களூருவில் இருந்து திருச்சி நோக்கி பெயின்ட் பாரம் ஏற்றிச் சென்ற லாரி வந்தது. இதனை, கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த குமார் (35) ஓட்டி வந்தார். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, முன்னால் எருமைகளை ஏற்றிச் சென்ற லாரி மீது மோதியது.
இதில் எருமைகளை ஏற்றிச் சென்ற லாரி, சாலையின் இடதுபுறமாக இருந்த கடையின் உள்ளே புகுந்து, அங்கிருந்த வீட்டின் சுவரை இடித்து தகர்த்திய நிலையில், கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கணேசன் (30), அவரது மனைவி தீபா (25), இவர்களது மகள்கள் வைஷ்ணவி (5), ராதிகா (4), தனு (3) மற்றும் லாரியில் வந்தவர்கள் உட்பட 11 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். விபத்தில் லாரியில் இருந்த 14 எருமைகள் உடல் நசுங்கி உயிரிழந்தன.
தகவலறிந்து அங்கு வந்த தொப்பூர் போலீஸார், காயம் அடைந்தவர்களைமீட்டு தருமபுரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago