பாரம்பரிய நெல்ரகங்களின் விதைகளை அரசே கொள்முதல் செய்து, மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என நமது நெல்லைக் காப்போம் பிரச்சார இயக்கக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் கிரியேட்- நமது நெல்லைக் காப்போம் பிரச்சார இயக்கத்தின் சார்பில் 14-வது ஆண்டாக நெல் திருவிழாக்கள் 8 மாவட்டங்களில் நடைபெற்றன.
பின்னர், இதன் தொடர் செயல்பாடுகளை ஆய்வு செய்து, மதிப்பீடு செய்து திட்டமிடவும், மாவட்ட அளவில் ஒருங்கிணைக்கவும் கிரியேட் அமைப்பின் தலைவர் பேராசிரியர் துரைசிங்கம் தலைமையிலான ஒரு குழு, கடந்த டிச.26-ம் தேதி முதல் டிச.30-ம் தேதி வரை திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ஈரோடு, தஞ்சாவூர், திருச்சி என 8 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது.
இந்தப் பயணத்தின் நிறைவாக, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் நினைவு தினமான நேற்று முன்தினம் தஞ்சாவூர் அருகே குருவாடிப்பட்டியில் விவசாயிகள் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. பேராசிரியர் துரைசிங்கம் தலைமை வகித்தார்.
நபார்டு வங்கியின் தஞ்சாவூர் மாவட்ட வளர்ச்சி மேலாளர் கே.பாலமுருகன், தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தின் தமிழ்ப் பண்டிதர் மணி.மாறன், சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழக பேராசிரியர் சத்யா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கிரியேட் நமது நெல்லைக் காப்போம் பிரச்சாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் ரகுநாதன், தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குருவாடிப்பட்டி அன்புச்செல்வன், இணை ஒருங்கிணைப்பாளர் நம்மநெல்லு அஷ்டலட்சுமி, கிரியேட் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வரதராஜன் மற்றும் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள், மகளிர் குழுவினர் கலந்துகொண்டனர்.
பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவதை அரசு சட்டப்பூர்வமாக்க வேண்டும். இதற்கான நிதியை மத்திய அரசு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும்.
கேரளாவைப் போன்று தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மைக்கான தெளிவான கொள்கைகளை அரசு உருவாக்க வேண்டும். அதைத் தயாரிக்க, முன்னோடி இயற்கை விவசாயிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் இயற்கை வேளாண் அறிஞர்கள் போன்றோருடன் கலந்தாலோசிக்க வேண்டும்.
குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் பாரம்பரிய நெல் ரகங்களை அரசே கொள்முதல் செய்து, அவற்றை பொதுவிநியோக திட்டத்தில் விற்க வேண்டும். மேலும், பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளை அரசே கொள்முதல் செய்து, விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ரங்கத்தில்...
கிரியேட்- நமது நெல்லைக் காப்போம் பிரச்சார இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் டிச.29-ம் தேதி ரங்கத்தில் நடைபெற்றது.கூட்டத்துக்கு கிரியேட் அமைப் பின் தலைவர் துரைசிங்கம் தலைமை வகித்தார்.
பிரச்சார இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் ரகுநாதன் பேசும்போது, பாரம்பரிய நெல் ரகங்களின் மருத்துவப் பயன்கள் குறித்து விளக்கினார்.
நமது நெல்லைக் காப்போம் பிரச்சார இயக்கத்தின் செயல் பாடுகளை வலுப்படுத்துவதற்கும், ஒருங்கிணைக்கவும் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக முசிறி யோகநாதன், இணை ஒருங்கி ணைப்பாளராக சம்பத்குமார் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.
முன்னதாக, முசிறி யோகநாதன் வரவேற்றார். நிறைவாக, கிரியேட் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வரதராஜன் நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago